புதுச்சேரி : சோலை நகர் மீனவர்கள் படகுகளை நிறுத்தும் இடம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
முத்தியால்பேட்டை, சோலை நகரில் இளைஞர் விடுதியின் சுற்றுச்சுவர், 'தானே' புயலின்போது இடிந்து விழுந்தது. கடல் அரிப்பு அதிகரித்து வருவதால், சுற்றுச்சுவர் இருந்த இடத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்கு இளைஞர் விடுதி நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்கு, சோலைநகர் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பான கூட்டம், இளைஞர் விடுதியில் நடந்தது. முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன், சப் கலெக்டர் சுதாகர், இளைஞர் விடுதி மேலாளர் சேஷாத்திரி, வருவாய்த் துறை ஆய்வாளர் கிருபாகரன், வி.ஏ.ஓ., முத்துக்குமார், துணை சர்வேயர் அய்யனார் மற்றும் சோலைநகர் மீனவ பஞ்சாயத்தார் கனகராஜ், கஜேந்திரன், பழனி, செல்வமணி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இளைஞர் விடுதியின் சுற்றுச்சுவரை சில அடி தூரம் உள்ளே தள்ளி கட்டினால் படகுகளை நிறுத்துவதற்கு வசதியாக இருக்கும் என, மீனவர்கள் தெரிவித்தனர். இதை, இளைஞர் விடுதி நிர்வாகத்தினர் ஏற்க முன்வரவில்லை.வையாபுரிமணிகண்டன் கூறும்போது, 'இப்பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைத்தால்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும். மீனவர்கள் வாழ்வாதாரமான படகுகளை நிறுத்துவதற்கு இடமில்லாததால்தான், இளைஞர் விடுதிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்த வேண்டியுள்ளது.ஊர் மக்களை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. மீனவர்கள் படகுகளை நிறுத்த மீன்வளத் துறையிடமும் போதிய இடம் இல்லை. எனவே, இளைஞர் விடுதியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யலாம். அந்த இடத்தை கையகப்படுத்தி மீனவர்களுக்கு வழங்க வேண்டும்' என்றார்.இந்த கூட்டம் குறித்தும், எம்.எல்.ஏ.,வின் கோரிக்கை தொடர்பாகவும் அறிக்கை தயாரித்து அரசிடம் வழங்குவதாக சப் கலெக்டர் சுதாகர் தெரிவித்தார். முன்னதாக, மீனவர்கள் படகுகளை நிறுத்தும் இடத்தை எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.