ஈரோடு: ஈரோட்டில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், மாநில நிர்வாகக்குழு கூட்டம் துணை தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், சங்க மாநில பொதுச் செயலாளர் பெரியசாமி, செயலாளர்கள் பாஸ்கர், சாத்தையா, துணை தலைவர்கள் பத்மாவதி, ஏனாதி ராசு, பொருளாளர் சந்திரகுமார் உட்பட பலர் பேசினர். கிராமப்பகுதி மக்களுக்கு, 100 நாள் வேலைத்திட்டத்தில், 100 நாள் வேலை வழங்க வேண்டும் என விதி உள்ளது. சில கிராமங்களில், ஓரிருவருக்கு மட்டும் பணி வழங்கிவிட்டு, ஊதியம் கூட வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். பல இடங்களில், மூன்று மாதமாக ஊதியம் வழங்கவில்லை. இப்பணிகளை ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கக்கூடாது. இப்பணிக்கு இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது. வேலை அட்டை வைத்துள்ள உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு, 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். ஊதியம் வழங்க தாமதமானால், 1,000 ரூபாய்க்கு, 50 ரூபாய் வீதம் அபராதம் சேர்த்து வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, டிச., 16ல் மாநில அளவில், அனைத்து மாவட்ட, வட்ட, வட்டார தலைநகரங்களில் உள்ள அரசு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.