தண்டவாளத்தை கடப்பவர்களால் பீதி: ஈரோடு, வெண்டிபாளையம் சாலை முதல் ரயில்வே கேட்டில், ரயில் வரும்போது சாலையை அடைக்கின்றனர். கேட்டில் பல கம்பிகள் இல்லாததாலும், சாதாரணமாக நடந்து செல்லும் வகையில் வழி இருப்பதாலும், பலரும் அபாயமாக தண்டவாளத்தை கடக்கின்றனர். கேட்டை தரமாக அமைத்து, அத்துமீறி கடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, டூவீலர்களில் செல்வோர் அதிகமாக கடப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
துருப்பிடித்த வழிகாட்டி பலகை: கோபி-சிறுவலூர் பிரிவு சாலையில், வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இது துருப்பிடித்து, அதன் எழுத்துக்கள் மங்கி வருகிறது. இதனால், வெளியூர்களில் இருந்து, இரவு நேரத்தில் வருவோர், வழிகாட்டி பலகையில் உள்ள எழுத்துக்கள் தெரியாமல் குழம்பி போகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், வழியை அறிய முடியாமல் குழப்பம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட, கோபி யூனியன் நிர்வாகம், வழிகாட்டி பலகையை புதுப்பிக்க ஆர்வம் காட்டலாமே.
சாக்கடையில் உள்ள வழிகாட்டி பலகை: ஜம்பை பஸ் நிறுத்தம் பகுதியில், சின்னியம்பாளையம் என்ற ஊரின் பெயர் கொண்ட வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத்துறையினர் வைத்திருந்தனர். வெளியூரில் இருந்து வரும் வாகனஓட்டிகள், மக்களுக்கு, வழிகாட்டி பலகையை அடையாளம் வைத்து, அந்த ஊருக்கு சென்று வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, வழிகாட்டி பலகையை அப்புறப்படுத்தி சிலர், பஸ் நிறுத்தம் பகுதியில் அருகில் உள்ள சாக்கடையில் போட்டுள்ளனர்.
கட்டட கழிவுகள் கரைகள் பாதிப்பு: ஈரோடு, கருங்கல்பாளையம் முதல், வெண்டிபாளையம் பகுதியில் ஓடும் காளிங்கராயன் வாய்க்கால் ஓரம், குப்பை, கட்டடம், ஆலைக்கழிவுகள் கொட்ட, மாநகராட்சி தடை விதித்துள்ளது. போர்டுகள் கூட வைத்துள்ளனர். ஆனாலும், பல வாகனங்களில் கட்டுமான கழிவுகள், பழைய வீட்டின் இடிபாடுகளை கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால், பாதை குறுகுவதுடன், வாய்க்காலில் கரைகளும் பலம் இழக்கிறது.