ஈரோடு: ஈரோடு வழியாக இயங்கி வந்த இரண்டு ரயில்கள், கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்ததால், ஈரோடு பயணிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நாகர்கோவில் -மும்பை விரைவு ரயிலும், திருநெல்வேலி- மும்பை தாதர் சாளுக்யா விரைவு ரயிலும், டிச., முதல் வாரத்தில் இருந்து, ஈரோடு வழியாக இயக்கப்படாமல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ரயில் பயணிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து, தென்னக ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் பாஷா கூறியதாவது: தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக இருந்த இரு ரயில்கள், கரூர், நாமக்கல் வழியாக இயக்க முடிவு செய்துள்ளது, கண்டிக்கத்தக்கது. ஈரோடு பயணிகளை, ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிக்கிறது. தென்னக ரயில்வேக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவது, ஈரோடு தான் என்பது ரயில்வே நிர்வாகத்துக்கு தெரியும். ஆனால், இந்த ரயில்களை ஈரோடு வழியாக இயக்காமல், மாற்று வழியில் இயக்குவது மோசமான முடிவாகும். ஏற்கனவே, ஓகா எக்ஸ்பிரஸ், சென்னை - ஈரோடு - திருநெல்வேலி ஆகிய ரயில்களையும், இதேபோல, மாற்றம் செய்துள்ளனர். இவற்றை மாற்றாவிட்டால், ரயில் பயணிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.