இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டடம்; கோவில், சேவை மையத்தில் பாடம் நடத்தும் அவலம்: எம்.எல்.ஏ., சொந்த ஊரில் மாணவர்கள் தவிப்பு| Dinamalar

இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டடம்; கோவில், சேவை மையத்தில் பாடம் நடத்தும் அவலம்: எம்.எல்.ஏ., சொந்த ஊரில் மாணவர்கள் தவிப்பு

Added : நவ 29, 2019

ஆத்தூர்: ஆத்தூர் எம்.எல்.ஏ., சொந்த ஊரில், அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், கோவில், சேவை மைய கட்டடத்தில், மாணவர்கள் படிக்கும் அவலம் தொடர்கிறது.
ஆத்தூர் அருகே, ராமநாயக்கன்பாளையத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, 2007ல், உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 130 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2004 - 05ல், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில், ஒன்பது, 10வது வகுப்பறை, தலைமையாசிரியர், ஆசிரியர் அலுவலகம், மேல்மாடியில் நூலகம் செயல்பட்டன. ஆனால், இக்கட்டட மேற்புற கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வந்தது. 2017, அக்டோபரில் பெய்த மழையால், கட்டட தெற்கு பகுதியில், 30 அடி நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டது. உட்புறமும், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்பதால், 'தடை செய்யப்பட்ட பகுதி' என, அறிவிப்பு பலகை வைத்து, மூன்றாண்டாக, அங்கு வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. இதனால், மீதமுள்ள நான்கு வகுப்பறைகளின், மேற்புற கான்கிரீட் பெயர்ந்து விழுவதோடு, மழைநீர் கசிந்து, வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்குகிறது. ஆபத்தான நிலையிலுள்ள இரு வகுப்பறையில், மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்றனர். இரு ஆண்டாக, பள்ளி முன் உள்ள விநாயகர், ஐயப்பன் கோவில் வளாகம், ஊராட்சி சேவை மைய கட்டடம், வகுப்பறை வெளிப்புற வளாகம் ஆகிய இடங்களில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதால், அவர்களால், கல்வியில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.

பள்ளி நிர்வாகம், மாற்று இடம் வழங்கக்கோரி, கலெக்டர், முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து, மேற்கு பனந்தோப்பில், 12 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தில், ஆறு ஏக்கரில் பள்ளிக்கு இடம் தேர்வு செய்ய, ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள், 2017ல் ஆய்வு செய்தனர். புதிதாக அரசு உயர்நிலைப்பள்ளி கட்ட, நபார்டு திட்டத்தில், 1.57 கோடி ரூபாய், தமிழக அரசு நிதி ஒதுக்கியது. கடந்த ஜனவரியில், 3.5 ஏக்கரில், பள்ளி கட்டடம் கட்ட, அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மாதத்துக்குள் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு செய்த இடத்தில் கட்டடம் கட்டாததால், ஒதுக்கீடு செய்த நிதி, அரசுக்கு திரும்பிச்செல்லும் அவலம் உள்ளது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, ஆத்தூர் தொகுதி, எம்.எல்.ஏ., சின்னதம்பியின் சொந்த ஊராக இருந்தும், பள்ளி கட்டடம் கட்ட முடியாமல் மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.

இதுகுறித்து, சின்னதம்பி கூறுகையில், ''பனந்தோப்பு பகுதியில் தேர்வு செய்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்கள், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதால், பள்ளி கட்டடம் கட்ட முடியவில்லை. வழக்கு முடிந்ததும், பணி தொடங்கும். ஒதுக்கீடு செய்த நிதி திரும்பிச்செல்லாது,'' என்றார்.

12 ஆண்டாக...: கடந்த, 12 ஆண்டாக, தொடக்கப்பள்ளி கட்டடத்தில், உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. தலைமையாசிரியர் உள்பட ஒன்பது ஆசிரியர்கள் உள்ளனர். நடப்பாண்டு முதல், ஆறாம் வகுப்பு முதல், ஆங்கில வகுப்பும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், 'ஸ்மார்ட் கிளாஸ்' அறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 2018 - 19ல், எஸ்.எஸ்.எல்.சி.,யில், 91 சதவீதம், கலைத்திருவிழாவில் மாநில அளவில் முதலிடம், மற்ற போட்டிகளிலும் சாதனை புரிந்த பள்ளியில், விளையாட்டு மைதான வசதியும் இல்லை என, ஆசிரியர்களே புலம்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X