தமிழகத்தில், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் துவக்க விழா, நேற்று காலை 10:30 மணிக்கு, திருப்பத்தூர் டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார்.
புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து, தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது: புதிதாக மாவட்டங்கள் உருவாக்குவதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை. வேண்டுமென்றே எதிர்கட்சி தலைவர், ஒரு பொய்யான கருத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். 2018ல் ஏற்கனவே புதியதாக மறுவரையறை செய்த வார்டுகளின்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால், திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடக்கும். கடந்தாண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது போல, இந்தாண்டும், இரண்டு கோடியே ஐந்து லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு வழங்கப்படும். நாளை(இன்று) சென்னை கோட்டையில் இத்திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சிக்கு, இருளாம்பட்டில், 1.96 கோடி ரூபாயில் தடுப்பணை, வண்ணான்துறை கானாற்றில், 2.50 கோடி ரூபாயில் தடுப்பணை, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் வார்டு, 7.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். வாணியம்பாடி, ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் தலா, 10 கோடி ரூபாயில் சிமானிக் மையம், ஏலகிரிமலையில் உள்விளையாட்டு அரங்கம், 50 லட்சம் ரூபாயில், தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், 97 கோடி ரூபாய் மதிப்பில், 7,977 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். 273 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடங்கள் கட்ட, அடிக்கல் நாட்டியும், 379 கோடி ரூபாயில் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில், அமைச்சர்கள் உதயகுமார், வீரமணி, நிலோபர்கபில் உள்பட பலர் பங்கேற்றனர். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம்: தமிழகத்தில், 36வது மாவட்டமான ராணிப்பேட்டை புதிய மாவட்டம் துவக்க விழா, நேற்று மதியம், 2:00 மணிக்கு, ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை மருத்துவ நிலைய வளாகத்தில் நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமி ராணிப்பேட்டை மாவட்டத்தை துவக்கி வைத்து, 8,630 பேருக்கு, 98 கோடியே, 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில், மேயர் பதவிக்கு நேரடி தேர்தலை கொண்டு வந்ததும், மறைமுக தேர்தலை கொண்டு வந்ததும், தி.மு.க., தான். தி.மு.க., கொண்டு வந்தால் அது சரி; அ.தி.மு.க., கொண்டு வந்தால் அது தவறு என, ஸ்டாலின் கூறி வருகிறார். தேர்தலை கண்டு அவர் அஞ்சுகிறார். ஏன் அஞ்ச வேண்டும். தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என ஸ்டாலின் நினைக்கின்றார். பா.ஜ. கூட்டணியில், தி.மு.க., இருந்தபோது சிறந்த அரசு என்றனர். தற்போது, அ.தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளதால், அடிமை அரசு என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். தி.மு.க., போல இல்லாமல், அ.தி.மு.க., தமிழகத்திற்கு மத்திய அரசின் மூலம் பல்வேறு முன்னோடி திட்டங்களை, மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் இது போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா. இவ்வாறு அவர் பேசினார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நன்றி கூறினார்.
முதல்வர் சொன்ன தர்மதேவதை கதை: திருப்பத்தூர் மாவட்டத்தை துவக்கி வைத்து பேசிய போது முதல்வர் பழனிசாமி, கூறிய குட்டிக்கதை: ஒரு அரசர் நேர்மையாக ஆட்சி செய்தார். ஒரு நாள் இரவு, அவரது கோட்டையை சுற்றிப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது அரண்மனையில் இருந்து ஒரு பெண் வெளியேறினார். 'அம்மா நீங்கள் யார்' என, கேட்டதற்கு, 'திருமகளான நான், ஒரே இடத்தில் நிரந்தரமாக இருப்பதில்லை. இங்கு, தங்கி நீண்ட நாள் ஆகிவிட்டதால் வெளியேறுகிறேன்' என்றார். 'சரி நீங்கள் போகலாம்' என, மன்னர் சொல்லி விட்டார். சிறிது நேரம் கழித்து மற்றொரு பெண் சென்றார். அவரை யார் என மன்னர் கேட்டதற்கு, 'நான் கலைமகள், திருமகள் இல்லாத இடத்தில் நான் இருக்க இயலாது போகிறேன்' என்ற அவரையும் அரசர் அனுப்பி வைத்தார். மூன்றாவதாக வெளியேறிய பெண்ணை, யார் என கேட்டதற்கு, 'நான் மலைமகள், திருமகளும், கலைமகளும் வெளியேறியதால், இந்த அரண்மனையில் வீரதிருமகளான எனக்கென்ன வேலை' எனக்கூறி வெளியேறினார். நான்காவதாக வந்த பெண்ணை, 'அம்மா நீங்கள் யார்' என, கேட்டதற்கு, 'நான் தர்ம தேவதை' என்றார். அந்த பெண்ணின் காலில் விழுந்த அரசர், 'யார் போனாலும் போகட்டும், தர்மம் வெளியேறினால் இந்த சாம்ராஜ்யம் அழிந்து போகும்' என, அரசர் கேட்டுக்கொண்டார். சரியென, தர்மதேவதை அரண்மனைக்குள் சென்று விட்டார். சிறிது நேரத்தில், வெளியே சென்ற மலைமகள், கலைமகள், திருமகள் ஆகியோர் அரண்மனைக்குள் வந்து, 'நீதி, தர்மம் எங்கு இருக்கிறதோ அங்கு தான் நாங்கள் இருப்போம். இவை இல்லாத இடம் தீயவர்களின் வேட்டை காடாகிவிடும். எனவே, இங்கேயே வந்து விட்டோம். சத்தியம் எங்கு வாழ்கிறதோ அங்கு, அனைத்து வளங்களும் தானாகவே சேரும்' என்றனர். சத்தியத்தாய் ஜெயலலிதாவின் உண்மை வழியில் நடக்கும், இந்த ஆட்சியில் மக்களுக்கு அனைத்து வளங்களும் தானாக வந்து சேரும். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் விபரம்: புதிய மாவட்டமான திருப்பத்தூர், 1,797.92 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை, 11 லட்சத்து, 11 ஆயிரத்து, 812. மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு நகராட்சிகள்; ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய மூன்று டவுன் பஞ்சாயத்துக்கள்; நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, ஆலங்காயம், பேர்ணாம்பட்டு, மாதனூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் வருகின்றன. திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய வருவாய் கோட்டங்களில், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி ஆகிய தாலுகாக்களும், 15 பிர்காக்கள், 195 வருவாய் கிராமங்கள், 207 கிராம ஊராட்சிகளும் உள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளும், எம்.பி., தொகுதியை பொறுத்த வரையில், வேலூர், திருவண்ணாமலையில் சில பகுதிகளும் இம்மாவட்டத்தில வருகின்றன.
ராணிப்பேட்டை மாவட்டம்: ராணிப்பேட்டை புதிய மாவட்டம், 2,234.32 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை, 12 லட்சத்து, 10 ஆயிரத்து, 277. அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய வருவாய் கோட்டங்களில், ஆற்காடு, வாலாஜாபேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய தாலுகாக்களும், 18 பிர்க்காக்கள், 330 வருவாய் கிராமங்கள், 288 கிராம ஊராட்சிகள் வருகின்றன. ஆற்காடு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, அரக்கோணம் ஆகிய ஐந்து நகராட்சிகள்; காவேரிப்பாக்கம், நெமிலி, ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் வருகின்றன. மேலும், அம்மூர், காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், சோளிங்கர், தக்கோலம், திமிரி, விளாப்பாக்கம், கலவை ஆகிய ஒன்பது டவுன் பஞ்சாயத்துக்களும் வருகின்றன. ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளும், எம்.பி., தொகுதியை பொறுத்த வரையில், அரக்கோணம் மட்டும் உள்ளது.
புதிய மாவட்டங்கள் துவக்க விழா துளிகள்
* திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்களை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதற்காக திருப்பத்தூர் அருகே, ஏலகிரிமலையில் உள்ள ஓட்டலில் அவர் நேற்று முன்தினம் இரவு தங்கியிருந்தார். நேற்று காலை அவர், மலையை சுற்றிப்பார்த்து, கொடைக்கானலை விட நன்றாக உள்ளதே என, சக அமைச்சர்களிடம் கூறினார்.
* முதல்வர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
* அமைச்சர் வீரமணி ஏற்பாட்டில் விழா நடப்பதால், அதிகளவு கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதற்காக, தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். திருப்பத்தூரில் காலை, 10:30 மணிக்கு விழா துவங்கியது. ஆனால் அதிகாலை, 2:00 மணிக்கே மக்கள் அழைத்து வரப்பட்டனர்.
* ராணிப்பேட்டை மாவட்டம் துவக்க விழா, பிற்பகல், 2:00 மணிக்கு நடந்தது. இதற்காக காலை, 6:00 மணியில் இருந்து பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர். காலை டிபன், மதியம் பிரியாணி கொடுத்து, ஆண்களுக்கு தலா, 300, பெண்களுக்கு தலா, 250 ரூபாய் கொடுத்து மக்கள் அழைத்து வரப்பட்டனர்.
* திருப்பத்தூரில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், 'இம்மாவட்டத்தில் உள்ள, ஆம்பூர் நகரில் தயாரிக்கப்படும் பிரியாணி உலக பிரசித்தி பெற்றது. இந்த வழியாக செல்பவர்கள், ஆம்பூரில் நின்று பிரியாணி சாப்பிட்டு விட்டு செல்வர்,'' என்றார். இதனால், வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்கள், பிரியாணி சாப்பிட ஆம்பூர் சென்றதால், அங்கு கூட்டம் அலைமோதியது.
* திருப்பத்தூர் விழாவை முடித்துக்கொண்டு, ராணிப்பேட்டைக்கு காரில் முதல்வர் சென்றார். அங்கு விழா முடிந்ததும், சென்னைக்கு காரில் சென்றார். அவர் சென்றபோது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், பொது மக்கள், பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
* நேற்று அதிகாலை முதலே, மழை பெய்தது. இதனால் விழா நடக்கும் இடம் சேறும், சகதியுமாக காணப்பட்டது. அவசர, அவசரமாக மண் கொட்டி சரி செய்யப்பட்டது.
* ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் நடந்த விழாவில் தலா, 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
- நமது நிருபர் -