கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே, நகை மற்றும் பணத்துக்காக, பாட்டியை கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு, எம்.ஜி.ஆர்.நகர், நாராயணசாமி மனைவி சரோஜா, 55. விவசாயி. இவருக்கு. இரு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். மூத்த மகள் அமுதாவின் மகன் செல்வம், 21. கட்டட மேஸ்திரி. இவர், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால், வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். செல்வம், கடந்த வாரம், தேவனாம்பட்டில் உள்ள அவரது பாட்டி சரோஜா வீட்டிற்கு வந்தார். அவரிடம், செலவுக்கு பணம் கேட்டதற்கு பாட்டி மறுத்துள்ளார். இதனால், செல்வத்திற்கும், சரோஜாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சரோஜா தூங்கி கொண்டிருந்தபோது, உருட்டு கட்டையால் தாக்கியும், முகத்தில் கல்லால் குத்தியும் கொலை செய்து, சரோஜா அணிந்திருந்த, செயின், கம்மல் மற்றும் வீட்டிலிருந்த, 5,000 ரூபாயை எடுத்துக்கொண்டு நேற்று, அதிகாலை தப்பிச்சென்றார். தகவலறிந்த கலசப்பாக்கம் போலீசார் விசாரித்து, சென்னையில் பதுங்கியிருந்த செல்வத்தை கைது செய்தனர்.