மொரப்பூர்: மொரப்பூர், கோணான் ஏரியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், அதை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், கோணான் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்புவதன் மூலம், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள ? மற்றும் ஆழ்துளை கிணறுகளின், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. மேலும், சீமைகருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால், அருகில் உள்ள விவசாய கிணறுகள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மொரப்பூர் பஞ்.,ல், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழிக்கழிவுகள் ஏரியில் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் ஏரி மாசடைந்து வருகிறது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, ஏரியில், குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், ஏரியில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி, தூர்வார, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.