தர்மபுரி: 'வெற்றியின் ரகசியம்' நிகழ்ச்சி, தர்மபுரியில், நாளை நடக்கவுள்ளது. அதில், புது பாடத்திட்டத்தில் சாதிக்கும் வித்தையை, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும் என்பதால், பெற்றோர், ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.
'காலைக்கதிர்' நாளிதழ், மாணவர்கள் நலனில், தனி அக்கறை எடுத்து, ஜெயிப்பது நிஜம், கல்வி வழிகாட்டி, உங்களால் முடியும் என, பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம், அவர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் குறித்த தடுமாற்றம், சில ஆசிரியர்களுக்கே உள்ளது. அதனால், அதை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வது எப்படி என்பதற்கான தீர்வை வழங்க, 'காலைக்கதிர்' சார்பில், 'வெற்றியின் ரகசியம், ஜெயிப்பது நிஜம் 2.0' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி, தர்மபுரி, பென்னாகரம் சாலை, செங்குந்தர் திருமண மண்டபத்தில், நாளை காலை, 9:30 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கவுள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக கல்வி ஆலோசகர்கள், பாடத்திட்ட தயாரிப்பு குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்கள், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் நிறுவன பேராசிரியர்கள், தன்னம்பிக்கை ஊட்டும் வல்லுனர்கள் பங்கேற்கவுள்ளனர். புது பாடத்திட்டம் குறித்து, தர்மபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆசிரியர் வாசுதேவனும், மனநலம் மற்றும் உடல் நலம் குறித்து, அமுல்ராஜூம் பேசுகின்றனர். புது பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளுதல்; தேர்வு நேரங்களில் உடல்நலம், மனநலத்தை பாதுகாப்பது; பல்வேறு நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் விதம்; மனப்பாடம் செய்யாமல் புரிந்து கற்று, மதிப்பெண்களை அள்ளும் வித்தை; தேர்வின்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்; தேர்வு நேரத்தில் செய்ய வேண்டிய பணி உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை வழங்கப்படும். இதில், பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு, முக்கிய வினாக்கள், குறிப்புகள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும். இதற்கு, அனுமதி இலவசம் என்பதால், அனைத்து அரசு, தனியார் பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோர், ஆசிரியர்களுடன் பங்கேற்று பயனடையலாம். பொதுத்தேர்வில் மதிப்பெண்களை அள்ளும் ரகசியத்தை கற்று, வளமான எதிர்காலம் அமைய, அனைவரையும் 'காலைக்கதிர்' அழைக்கிறது.