ஓசூர்: ''ஒரே நேரத்தில், ஆறு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்த பெருமை, தமிழக முதல்வர் பழனிசாமியை சேரும்,'' என, அமைச்சர் அன்பழகன் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டியில், தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பெற்ற மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு, நலத்திட்ட உதவி வழங்கும் விழா, ஓசூரில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மொத்தம், 3,683 பயனாளிகளுக்கு, பல்வேறு துறைகள் சார்பில், 11 கோடியே, 55 லட்சத்து, 43 ஆயிரத்து, 278 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 65 புதிய கல்லூரிகள், 961 புதிய பாடப்பிரிவுகளை கொண்டு வந்தார். தற்போதைய முதல்வர் பழனிசாமி, 17 புதிய கல்லூரிகள், 705 பாடப்பிரிவுகளை கொண்டு வந்துள்ளார். ஆறு மருத்துவ கல்லூரிகளை ஒரே நேரத்தில் கொண்டு வந்தவர் முதல்வர் பழனிசாமி. மேலும், மூன்று மருத்துவ கல்லூரிகள் கேட்கப்பட்டதில், கிருஷ்ணகிரி மாவட்டமும் ஒன்று. இன்னும் ஒரு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தால், 10 மருத்துவ கல்லூரியை கொண்டு வந்த பெருமை முதல்வர் பழனிசாமியை சேரும். ஏழை, எளிய மக்களுக்கு கோழி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வர் பழனிசாமி. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.