கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, மருத்துவக் கல்லூரியை நாங்கள் தான் கொண்டு வந்தோம்' எனக்கூறி, அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, சமூக வலைதளங்களில், தகவல் பரப்பி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது முதல், இங்கு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி கொண்டு வர, கோரிக்கை வலுத்தது. இது குறித்து, கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.,க்கள் லோக்சபாவிலும், எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையிலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை பேசினர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி துவங்க, மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. அன்று மாலை, கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில், 'கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, அ.தி.மு.க.,தான் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி, மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தது' என, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். இதே நேரத்தில், மருத்துவ கல்லூரி கொண்டு வந்த ஸ்டாலினுக்கும், மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவனுக்கும் நன்றி தெரிவித்து, தி.மு.க.,வினரும், செல்லகுமார் எம்.பி.,தான் போராடி மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தார். அவருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி என, காங்., கட்சியினரும், சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். இதையெல்லாம் பார்த்த, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், மருத்துவக்கல்லூரி கொண்டு வர, எந்த கட்சி பாடுபட்டிருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம், என மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.