வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் ஒன்றியத்தில், 327 திட்டப்பணிகள் நடந்து வருவதாக, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.
வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி, ஆர்.புதுப்பாளையம், குட்டலாடம்பட்டி, தொட்டியவலசு, மூலக்காடு, அலவாய்ப்பட்டி, ஓ.சவுதாபுரம், அக்கரைப்பட்டி, மின்னக்கல், நெ.3.கொமாரபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடந்தது. அமைச்சர் சரோஜா, மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் முதியோர் உதவித்தொகை பெறும் திட்டத்தில், 29 லட்சத்து,60 ஆயிரம் பயனாளிகள், மாதந்தோறும், 1,000 ரூபாய் பெறுகின்றனர். தற்போது கூடுதலாக, ஐந்து லட்சம் பயனாளிகளுக்கு, முதியோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். வெண்ணந்தூர் ஒன்றியத்தில், 15.26 கோடி ரூபாய் மதிப்பில், 327 வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குட்டலாடம்பட்டி முதல் பல்லவாநாயக்கன்பட்டி வரை தார்ச்சாலை அமைக்கும் பணி, தொட்டிய வலசு முதல், குட்டலாடம்பட்டி வரை, 3.4 கி.மீ., தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பூமி பூஜைபோட்டு தொடங்கி வைத்தார். ஆர்.புதுப்பாளையத்தில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாமில், விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக சக்கர நாற்காலியை வழங்கினார். குட்டலாடம்பட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி மைய குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் தாமோதரன், ஆர்.சி.எம்.எஸ்., தலைவர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.