சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு, இன்று(நவ.,29) முதல், ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி, தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் சார்பில், ரேஷன் கடைகளில், கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் தயாரிக்கும் பொருட்களுடன், ரொக்க பணம், பரிசு தொகுப்பாக வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு பொங்கலுக்கு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம், கரும்பு துண்டு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இவை, அரிசி கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக, அனைத்து கார்டுகளுக்கும் வழங்குவதாக, அரசு அறிவித்தது.
வசதி படைத்தவர்களுக்கு, பணம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், எந்த பொருளும் வாங்காத, 45 ஆயிரம் கார்டுதாரர்கள் தவிர, அரிசி, சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. வரும் பொங்கலுக்கு, எந்த பிரச்னையும் இன்றி, சர்க்கரை கார்டுகளுக்கும், ரொக்கம் வழங்க முடிவு செய்த அரசு, அதற்காக, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என, ஏற்கனவே அறிவித்து உள்ளது.

இதைத் தொடர்ந்து, 'இந்த ஆண்டு, அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள, அனைத்து குடும்பங்களுக்கும், தலா, 1,000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. இன்று காலை, சென்னை தலைமை செயலகத்தில், அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவத்தார். மேலும், பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார்.
இ-ஆட்டோ சேவை
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத்துறை சார்பில் வால்வோ சொகுசு பேருந்துகள், மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த இ-ஆட்டோ, ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ., வரை செல்லக்கூடியது.