தமிழ்நாடு

வாழைத்தார் விலை வீழ்ச்சியால் அதிர்ச்சி: சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க கோரிக்கை

Added : நவ 29, 2019
Advertisement

நாமக்கல்: தமிழகத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், பொதுமக்கள் மத்தியில் நுகர்வு சரிந்துள்ளதாலும், வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தமிழகத்தில், 2.50 லட்சம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில், மொத்த உற்பத்தி, 27 லட்சம் டன். அதில், மூன்றில் ஒரு பங்கு, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, தேனி, கடலூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பச்சை வாழை, பூவன், நேந்திரன், நெய் பூவன், செவ்வாழை, ரஸ்தாளி ரகங்கள், வர்த்தக ரீதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. சொட்டு நீர் பாசன சாகுபடி, திசுவளர்ப்பு ஆகியவற்றுக்கு மானியம் கிடைப்பதால், சாகுபடி பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வாழை இலைக்காக மட்டும், தூத்துக்குடி, திருச்சி மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, பெரியகுளம், தஞ்சை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில், சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டு பருவமழை பெய்துள்ளது. அதனால், வாழைகள், விரைந்து முதிர்ச்சி அடைந்து, அறுவடைக்கு வந்துவிட்டன. தீபாவளிக்கு பின், பொங்கல் வரை, பெரிய அளவில் பண்டிகை இல்லை. கார்த்திகை, மார்கழி மாதங்களில், சுபநிகழ்ச்சியும், திருவிழா போன்றவையும் இல்லாததால், பயன்பாடு குறைந்துள்ளது. அதனால், வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஒருவந்தூர், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த ஏலத்தில், 1,070 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு வாழைத்தார் குறைந்தபட்சம், 10 ரூபாய், அதிக பட்சம், 290 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்த வாழைத்தார்களும், 30 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகின.

தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அஜிதன் கூறியதாவது: தமிழகத்தில், பருவமழை அதிக அளவில் பெய்ததால், வாழை உற்பத்தி அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, சிப்பம் கட்டும் கூடம், குளிரூட்டி பழுக்க வைக்கும் கூடம், 40 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை, விவசாயிகள், சாகுபடி குழுக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சந்தையில் வரத்து அதிகமுள்ள காலங்களில், குளிரூட்டும் கூடத்தில், வாழைத்தார்களை சேமித்தால், விலை வீழ்ச்சியை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். மேலும், உலர் பவுடர், ஜூஸ், பழ அத்தி, ஊறுகாய், பழ ஜாம் போன்ற மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யலாம். இதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து, திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், தமிழக வேளாண் பல்கலை கோவை, மதுரை ஆகியவற்றில் பயிற்சி அளிக்கின்றனர். அதேபோல், சத்துணவில், குழந்தைகளுக்கும் வாழைப்பழம் வழங்கலாம். உழவர்சந்தைகளில் குளிரூட்டப்பட்ட அறைகள் பெருவாரியாக உள்ளன. அங்கு, பழங்களை குளிரூட்டி பழுக்க வைத்து விற்பனை செய்யலாம். சிற்றூர்களிலும், சிறு நகரங்களிலும், இத்தகைய கூடங்களை வியாபாரிகள் முன்வந்து அமைத்தால், அதற்காக அரசின் மானியத் தொகை அளித்து, ஊக்கப்படுத்த வேண்டும். பழங்களை வடமாநிலங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல குளிரூட்டப்பட்ட சரக்கு ரயிலில் வசதிகள் அறிமுகம் செய்தால், அங்கு சந்தைப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும். ஐந்து ஆண்டுகளுக்கு முன், மத்திய, பா.ஜ., அரசு, தேர்தல் வாக்குறுதியில், குளிரூட்டப்பட்ட சரக்கு ரயில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தது. இதுவரை, அவற்றை செயல்படுத்தவில்லை. தற்போது, வடமாநிலங்கள் செல்லக்கூடிய விரைவு ரயிலில், ஒரு குளிரூட்டப்பட்ட சரக்கு பெட்டி இணைக்கப்பட்டால், வாழைப்பழம் மட்டுமில்லாமல், மா, இளநீர், மிளகாய், சப்போட்டா, கொய்யா போன்றவற்றையும், வடமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும். சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதன் மூலம் மட்டுமே, விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் பாலசுப்ரணியம் கூறியதாவது: வாழைத்தாரை இயற்கை முறையில் பழுக்க வைக்காமல், அதிக லாபத்துக்காக, செயற்கை முறையில், ரசாயனம் மற்றும் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கின்றனர். அவற்றை உட்கொள்ளும்போது, பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதால், நுகர்வு சரிந்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அவற்றை கட்டுப்படுத்தினால் மட்டுமே, நுகர்வு அதிகரித்து, அதன் விலை உயரும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X