சேலம்: பீடி கடன் கொடுக்க மறுத்த, மளிகை கடைக்காரரின் காதை கடித்து துப்பியவருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பனமரத்துப்பட்டி அருகே, ஜல்லூத்துபட்டியைச் சேர்ந்தவர் காமராஜ், 45; மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன், 25. இவர், 2015, ஜன., 14ல், பீடி கடன் கேட்டுள்ளார். காமராஜ் கொடுக்க மறுத்ததால், இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த தனசேகரன், காமராஜின் காதை கடித்து துப்பினார். சேலம் அரசு மருத்துவமனையில், காமராஜ் சேர்க்கப்பட்டார். பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, தனசேகரனை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் ஜே.எம்.எண் - 1ல் நடந்து வந்தது. நேற்று, தனசேகரனுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் செந்தில்குமார் உத்தரவிட்டார்.