பந்தலுார்:பந்தலுார் அருகே, பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த குட்டிக்காக, 30 மணி நேரத்துக்கும் மேலாக, தாய் யானை பாசப் போராட்டம் நடத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, சேரம்பாடி நாயக்கன் சோலை பகுதியில், ஏழு யானைகள், குட்டியுடன் உணவுக்காக வனப்பகுதிக்கு வந்துள்ளன. அதில், குட்டி யானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்து, நேற்று முன்தினம் இரவு இறந்துள்ளது.அப்பகுதியில் யானைகளின் பிளிறல் சப்தம்கேட்ட மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர், குட்டி யானை இறந்து கிடப்பதையும்; தாய் யானை, யாரையும் நெருங்க விடாமல் நிற்பதையும் கண்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
கூடலுார் உதவி வனப்பாதுகாவலர் விஜயன் மற்றும் வனச்சரகர் கணேசன் உள்ளிட்ட வனக்குழுவினர், பட்டாசு வெடித்து தாய் யானையை விரட்டி, குட்டி யானை உடலை கயிறு கட்டி டிராக்டரில் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு இழுத்தனர்.இதை பார்த்த தாய் யானை மற்றும் சில யானைகள் ஆக்ரோஷம் அடைந்து விரட்டி வந்து, அங்கிருந்த வனத்துறையினரின் இரண்டு அரசு வாகனம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த, எட்டு இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தின. அங்கு உள்ள முருகன் கோவில் உட்பட இரு கட்டடங்களையும் உடைத்து சேதப்படுத்தின.
தொடர்ந்து, உயிரிழந்த குட்டியின் அருகே தாய் யானை, 30 மணி நேரத்துக்கும் மேலாக, உணவு உட்கொள்ளாமல் ஆக்ரோஷத்துடன் நின்றுள்ளது. இதனால், நாயக்கன்சோலை மக்கள், வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியவில்லை.