வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் கோணியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள், தின்பண்டங்கள் வாங்க பெற்றோர் வழங்கிய பணத்தை சேமித்து காந்தி சிலையை அமைத்துள்ளனர்.
பெற்றோர் வழங்கிய பணத்தை இப்பள்ளியின் 50 மாணவர்கள் தலைமை ஆசிரியர் ராஜலட்சுமியிடம் கொடுத்து சேமித்தனர். சேமிப்பு குறித்து சுதந்திர தின விழாவில் தலைமை ஆசிரியர் அறிவித்தார். அதில் ரூ.4,600 இருந்தது.இதையடுத்து பள்ளி வளாகத்தில் காந்தி சிலை வைக்க மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பையும் சேர்த்து மார்பளவு காந்தி சிலையை உருவாக்கினர்.
அதோடு பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பும் உருவானது. நேற்று சிலை திறப்பு விழாவும், ஸ்மார்ட் வகுப்பும் துவக்கி வைக்கப்பட்டது.வட்டார கல்வி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, எஸ்தர்ராஜம் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வுப் பிரிவு மாநில தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். காந்தி சிலையை பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., பள்ளிகளின் மேலாண்மைக்குழு தலைவர் ராஜாராம், கல்வி ஆலோசனைக்குழு தலைவர் மோகன் அருணாச்சலம் திறந்து வைத்தனர். பெற்றோர் ஆசிரியர் கக தலைவர் சாந்தி நன்றி கூறினார்.