மழைநீரை சேமித்து பணம் ஈட்டும் விவசாயி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீரை சேமித்து பணம் ஈட்டும் விவசாயி

Added : நவ 29, 2019 | கருத்துகள் (3)
மழை நீர், விவசாயி

நிலக்கோட்டை: வியர்வை சிந்த வயலில் உழைக்கும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் திணறுவது வாடிக்கையாகிப் போனது. பல விவசாயிகளுக்கு, பயிரிட்ட பயிர்களுக்கு உரிய தண்ணீரை வழங்க முடியாமல் வாடிப் போவதும் வாடிக்கையாகிவிட்டது.

இவர்களுக்கு மத்தியில் இந்த இரண்டையும் பொய்யாக்கி, சமாளித்து, பணம் ஈட்டி வரும் நிலக்கோட்டை விவசாயி அந்தோணி 40, பாராட்ட தக்க மனிதராக விளங்குகிறார். உண்மைதான் அவரது முயற்சியை தொடர்ந்து படியுங்களேன்: இவர் வயலில் கிணறோ, ஆழ்துளை கிணறோ இல்லாமல் மழை நீரை சேமித்து, பயன்படுத்தி நாற்று வளர்த்து விற்பனை செய்கிறார். நிலக்கோட்டை அருகே ராயப்பன்பட்டியைச் சேர்ந்த அந்தோணி, தனது தோட்டத்தில் பூ விவசாயம் செய்கிறார். தோட்டத்தில் பாசனத்திற்கு ஆழ்துளை ஒன்று அமைத்தார். நீர் இல்லாமல் போனதால் சோர்ந்துவிடவில்லை. புதுமையாக சிந்தித்தார்.

மேட்டுப்பகுதியில் இருந்து வரும் மழை நீரை தனது நிலத்திற்கு வரும்படி செய்து அதனை சேமித்து பயன்படுத்தி வருகிறார். ஆழ்துளைக்காக ஆயிரக்கணக்கில் செலவிட்ட அந்தோணி மழைநீர் சேகரிப்பு அமைப்பிற்காக ஒரு பெரிய தொட்டி மட்டுமே கட்டி நீரை சேமித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், விவசாயத்தில் லாபம் இல்லை எனக் கூறுகின்றனர். வீட்டில் உள்ளவர்கள் சோம்பேறித்தனத்தை கைவிட்டு, புதுமையாக சிந்தித்து உழைத்தால் நல்ல லாபம் கொழிக்கும் தொழில் இது. ஆழ்துளை அமைத்தேன். தண்ணீர் கிடைக்கவில்லை. மனம் தளராமல் மழை நீரை சேமித்து, கிடைக்கும் நீரில் பூ, கீரை, துளசி நாற்றுகள் வளர்த்து விற்பனை செய்கிறேன்'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X