பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் அவர் அறைக்குள் செல்பவர்கள், சிறிது நேரத்தில் முகமலர்ச்சியுடன் திரும்புகின்றனர். எத்தனை பேர் காத்திருந்தாலும், அவர்கள் குறைகளை கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 'விசாரித்து ரிப்போர்ட் பண்ணுங்க' என உத்தரவிடுவதுடன், 'அந்த பெட்டிஷன் என்னாச்சு' என 'பாலோ அப்' செய்கிறார். அவர் மதுரை மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன். 2017 ஜூலை 3 எஸ்.பி.,யாக பொறுப்பேற்கும்போது, 'மதுரை மாவட்டம் குற்றமில்லாத, விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற முயற்சிக்கப்படும்' என்றார். அது எந்தளவில் உள்ளது என்பது போன்ற கேள்விகளுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி...
இரண்டரை ஆண்டுகளில் உங்கள் முயற்சி பலித்துள்ளதா?
ரவுடியிசம், கஞ்சா, மது, நகைபறிப்பு, விபத்து தடுப்பு உட்பட அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விபத்து, குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
புதுப்புது குற்றவாளிகள் உருவாவது சவாலாக உள்ளதா?
போலீசில் சிறப்பு தனிப்படைகள் உள்ளன. 'வில்லேஜ் விசிட்' செல்கிறோம். சந்தேகப்படியான நபர்கள் தென்பட்டால் மக்கள் எங்களிடம் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் புதிய குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள் மாவட்டத்தில் அதிகம் பார்க்க முடியவில்லையே?
இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடைகள், திருமண மண்டபங்கள், விடுதிகளில் எங்கள் அறிவுறுத்தலின்படி வைத்து வருகின்றனர். வாரந்தோறும் அதுகுறித்து ஆய்வு நடக்கிறது. தேவையான இடங்களில் கேமரா வைக்கப்படுகிறது. சமீபத்தில்கூட விக்கிரமங்கலம் பகுதியில் திண்டுக்கல் எல்லை பகுதியில் செக்போஸ்ட் அமைத்து கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறதே? கட்டுப்படுத்த முடியாதா?
கடந்தாண்டுகளில் நடந்த சாலை விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பை இந்தாண்டு 17 சதவீதமாக குறைத்துள்ளோம். அடுத்தாண்டு 25 சதவீதமாக குறைப்பதே எங்கள் இலக்கு. விபத்து நடக்கும் பகுதியில் நானோ, ஏ.டி.எஸ்.பி., கணேசனோ நேரில் ஆய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதனால் விபத்து வழக்குகள் 5 சதவீதம் குறைந்துள்ளன. சாலை விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமம் ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. 5 ஆயிரம் பேருக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதே?
சமூக வலைதள குற்றங்களுக்காகவே தனி குழுவை ஏற்படுத்தியுள்ளேன். அதன் ஆபத்துகள் குறித்து 'மீம்ஸ்' மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது மக்களிடம் நல்லா 'ரீச்' ஆகிறது. சைபர் கிளப் மூலம் திருடப்பட்ட 400 அலைபேசிகள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம்., மோசடியில் பணம் இழந்தவர்களுக்கு 24 மணி நேரத்தில் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
அலுவலக தோட்டத்தை பயன்தரும் வகையில் மாற்ற போகிறீர்களாமே?
ஆமாம். கடச்சனேந்தலில் இருந்துதான் கண்ணகி, மதுரை நகர் நோக்கி சென்றதாக நம்பப்படுகிறது. அந்த ரோட்டில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தில், அவரது கதையை சொல்லும் சிலப்பதிகாரத்தை அனைவரும் அறியும் வகையில் கல்வெட்டுகளுடன் கூடிய தோட்டம் அமைக்க உள்ளோம்.
மதுரை மக்களிடம் எதிர்பார்ப்பது?
எந்த குற்றமாக இருந்தாலும் பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். உயிரையும், குடும்பத்தையும் பாதுகாக்க ெஹல்மெட், 'சீட்' பெல்ட் அணிந்து வாகனம்
ஓட்டுங்கள். குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம்.