இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: இருநாட்டு மக்களின் நலனுக்காக இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயல்பட வேண்டும் என டில்லியில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று (நவ.,28) டில்லி வந்தார். அவரை, வெளியுறவு இணை அமைச்சர் விகே சிங் வரவேற்றார்.இன்று, ஜனாதிபதி மாளிகையில், கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதன் பின்னர் நிருபர்களிடம் கோத்தபயா கூறியதாவது: இலங்கை அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியா வந்துள்ளேன். சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய அரசு, ஜனாதிபதிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது பதவிக்காலத்தில், இந்தியா இலங்கை உறவுகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையே நீணட கால உறவு உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புவிஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் கோத்தபயா, பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.