இந்த செய்தியை கேட்க
புதுடில்லி ; பா.ஜ., எம்.பி., பிரக்யா தாக்கூரை பயங்கரவாதி என விமர்சித்ததற்காக அக்கட்சி நடவடிக்கை எடுக்கட்டும். அதனை வரவேற்கிறேன் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
லோக்சபாவில் பா.ஜ., எம்.பி., பிரக்யா தாக்கூர், கோட்சேவை சேதபக்தர் எனக்கூறினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், '' பயங்கரவாதி பிரக்யா, பயங்கரவாதி கோட்சேவை தேசபக்தர் என்று அழைக்கிறார். பார்லிமென்ட் வரலாற்றில் மிகவும் வருத்தமான நாள்'' என தெரிவித்திருந்தார்.

பலரின் எதிர்ப்பை தொடர்ந்து, பிரக்யா லோக்சபாவில் இன்று வருத்தம் தெரிவித்தார். ராகுலின் கருத்துக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தது. அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்கிறது.
இது தொடர்பாக நிருபர்களிடம் ராகுல் கூறுகையில், பிரக்யா தாக்கூர் குறித்த எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். டுவிட்டரில் நான் என்ன சொன்னேனோ அது தான் எனது நிலைப்பாடு. என் மீது பா.ஜ., நடவடிக்கை எடுக்கட்டும். எனக்கு பிரச்னையில்லை. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்யட்டும். அதனை நான் வரவேற்கிறேன். தாக்கூர் எதன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாரோ அதனை தான் சொல்கிறார். அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அவர் நம்புகிறார். கோட்சேவுக்கு வன்முறையில் தான் நம்பிக்கை இருந்தது. பிரக்யாவும் வன்முறையை நம்புகிறார். எனக்கூறினார்.

கோட்சேவை பிரக்யா புகழ்ந்தது தொடர்பாக நேற்று முன்தினம் பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் கூறுகையில், பா.ஜ.,வின் மனதில் உள்ளதை தான் பிரக்யா கூறியுள்ளார். இதற்கு நான் என்ன சொல்ல முடியும். இதனை மறைக்க முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி எனது நேரத்தை வீணடிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE