ராஞ்சி, : ஜார்க்கண்டில், சட்டக்கல்லுாரி மாணவியை, ஒரு கும்பல், பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, 12 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், தலைநகர் ராஞ்சி அருகே, சட்டக்கல்லுாரியில் படிக்கும் மாணவி, தன் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல், இளம் பெண்ணின் ஆண் நண்பரை சரமாரியாக தாக்கியது.
அந்த கும்பலில் இருந்தவர்கள், துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். பின், அந்த பெண்ணை மட்டும் காரில் கடத்திச் சென்றனர். ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, தப்பி ஓடினர். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து, தீவிர விசாரணை நடத்திய போலீசார், 12 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, ஒரு கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, எட்டு மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன.