ஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ!

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
 ஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ!

சென்னை மின்சாரத்தில் இயங்கும், 100 ஆட்டோக்களை, பொது மக்கள் பயன்பாட்டிற்காக, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர், ஆகஸ்ட், 28 முதல், செப்., 10 வரை, பிரிட்டன், அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு, சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
அப்போது, 8,835 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தனர். 35 ஆயிரத்து, 520க்கும் மேற்பட்டோருக்கு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. துபாயில், இந்திய துணை துாதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து, முதலீட்டாளர் சந்திப்பு நடந்தது. இதில், பெட்ரோல் ஆட்டோக்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக, நுாறு கோடி ரூபாய் முதலீட்டில், 5,000 பேருக்கு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 'கே.எம்.சி., குழுமம் மற்றும் எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி' நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அதை செயல்படுத்தும் விதமாக, 'எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி' நிறுவனம் சார்பில், பெட்ரோல் ஆட்டோக்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில், மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றி அமைக்கப்பட்டன.முதல்கட்டமாக, சென்னையில், நுாறு மின்சார ஆட்டோக்களை, பொது மக்கள் பயன்பாட்டிற்காக, துவக்கி வைக்கும் விழா, நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., நான்கு மின்சார ஆட்டோக்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'எம் ஆட்டோ' குழுமத்தின் தலைவர் மன்சூர் அலிகான் பங்கேற்றனர்.
கண்காணிப்பு கேமரா ஜி.பி.எஸ்., வசதி!
* மின்சார ஆட்டோக்களில், மூன்று மணி நேரம், முழுமையாக சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் துாரம் செல்ல முடியும்.
* மின்சார ஆட்டோக்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது; ஜி.பி.எஸ்., வசதி உள்ளது.
* ஆபத்து பொத்தான் உள்ளது. அதை அழுத்தினால், போக்குவரத்து போலீசாருக்கு, தகவல் செல்லும் வசதி உள்ளது* இந்த ஆட்டோக்களை, 'Mauto pride' என்ற, 'மொபைல் ஆப்' வாயிலாக, பொது மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்
* அடுத்த கட்டமாக, 4,000 பெட்ரோல் ஆட்டோக்களை, மின்சார ஆட்டோக்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 10 சதவீதம் திருநங்கையருக்கு ஒதுக்கப்பட உள்ளது* மின்சார ஆட்டோவிற்கு, 2.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. பழைய ஆட்டோக்களை மாற்ற, 1.25 லட்சம் ரூபாய் செலவாகும். இந்த ஆட்டோவில், கட்டணமும் குறைவாக இருக்கும்.

சுற்றுலா துறைக்கு புதிய சொகுசு பஸ்
சுற்றுலா பயணியருக்கு, சிறந்த சேவை அளிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சொகுசு பஸ்கள் வாங்கப்படுகின்றன. இதுவரை, 13 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. புதிதாக ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 1.12 கோடி ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன் கூடிய, வால்வோ சொகுசு பஸ் வாங்கப்பட்டுள்ளது. இந்த பஸ், 43 இருக்கைகள் உடையது. நவீன வசதிகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பஸ்சின் சேவையை, தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X