இலங்கைக்கு ரூ.3,150 கோடி உதவி: கோத்தபயாவிடம் பிரதமர் உறுதி| Dinamalar

இலங்கைக்கு ரூ.3,150 கோடி உதவி: கோத்தபயாவிடம் பிரதமர் உறுதி

Updated : டிச 01, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (11)
இலங்கை, கோத்தபயா, பிரதமர், உறுதி

புதுடில்லி : இலங்கையில், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காகவும், 3,150 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக, இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேவிடம், பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

அண்டை நாடான இலங்கையில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்று, அதிபராக பதவியேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.


சிவப்பு கம்பள வரவேற்பு

இந்த அழைப்பை ஏற்று, கோத்தபயா ராஜபக்சே, நேற்று முன்தினம் மாலை டில்லி வந்தார். நேற்று, ஜனாதிபதி மாளிகைக்கு வந்த கோத்தபயாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் வரவேற்றனர். இதன் பின், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், அணி வகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், கோத்தபயாவும், இரு தரப்பு உறவு, இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பாதுகாப்பு, இந்திய பெருங்கடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்தினர். அப்போது, இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க, 350 கோடி ரூபாயும்; கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக, 2,800 கோடியும் நிதி அளிப்பதாக, பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது:இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்தியா முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும். இரு தரப்பு உறவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்திய பாதுகாப்பு அமைப்புகள் பயிற்சி அளித்து வருகின்றன.

இலங்கையில், வளர்ச்சி பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும், தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்படும் என்றும் நம்பிக்கை உள்ளது. இலங்கையில் நிலையான அரசு அமைவது, இந்தியாவுக்கு மட்டு மல்ல, இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்கே நல்லது. இவ்வாறு, அவர் கூறினார்.


படகுகள் விடுவிக்கப்படும்

இலங்கை அதிபர் கோத்தபயா கூறியதாவது:பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சு, பயனுள்ள வகையில் இருந்தது. இரு தரப்பு உறவு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் பேசினோம்.பாதுகாப்பு குறித்த விஷயத்திலும் இணைந்து செயல்படுவது பற்றியும் பேச்சு நடத்தப்பட்டது. என் பதவிக் காலத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மிகவும் பலப்படுத்தும் வகையில் செயல்படுவேன். இந்தியா - இலங்கை இடையே வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நீண்ட காலமாக தொடர்பு உள்ளது.

இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது. இந்த விஷயத்தில், ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை, இலங்கை அரசு மேற்கொள்ளும். இவ்வாறு, அவர் கூறினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடனும், கோத்தபயா ராஜபக்சே பேச்சு நடத்தினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X