நடிகர்களுக்கு ஓட்டு போடும் காலம் போய் விட்டது: நடிகை ரோஜா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நடிகர்களுக்கு ஓட்டு போடும் காலம் போய் விட்டது: நடிகை ரோஜா

Added : நவ 29, 2019

சென்னை. : ''நடிகர்களுக்கு ஓட்டு போடும் காலம் போய் விட்டது,'' என, நடிகை ரோஜா கூறினார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, நடிகை ரோஜா, ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். நகரி தொகுதி ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு, தெற்கு ரயில்வே சார்பில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு, ரோஜா நேற்று வந்தார்.

அவருடன், சித்துார் எம்.பி., ரெட்டப்பாவும் வந்தார். இருவரும், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸை சந்தித்து, நன்றி தெரிவித்தனர். பின், ரோஜா அளித்த பேட்டி:அரசியலுக்கு யார் வேண்டு மானாலும் வரலாம்; மக்கள் நம்பி ஓட்டு போட்டால் தான், முதல்வராகலாம். மக்களுக்கு கஷ்டம் வரும் போது, 'நான் இருக்கிறேன்' என, ஓடிப் போய் உதவி செய்தால் தான், மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்.'ஏசி' அறையில் அமர்ந்து, பேட்டி கொடுத்து விட்டால், மக்கள் ஓடி வந்து, ஓட்டு போட மாட்டார்கள். நடிகர் என்றாலே, மக்கள் ஓட்டு போடும் காலம் போய் விட்டது. யார், எப்படிப்பட்டவர்கள் என்பதை, சமூக வலைதளங்கள் வாயிலாக, மக்கள் நன்றாக தெரிந்துள்ளனர்.

மக்கள் புத்தி சாலிகள்; யாரை மேலே உட்கார வைக்க வேண்டும்; கீழே வைக்க வேண்டும் என, அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.ஜெயலலிதா இறந்த பின், தமிழக அரசியல் நடவடிக்கைகளை, நான் கவனிப்பதில்லை. தற்போது, முதல்வராக இருப்பவர், பதவிக்கு வரும்போது, யார் என தெரியாதவர் போல் சாதாரணமாக வந்தார். இன்று, தனித்தன்மை உள்ளவராக வளர்ந்துள்ளார். அ.தி.மு.க., இல்லா மல் போய் விடும் என நினைத்தவர்களை யோசிக்க வைத்துள்ளார். கட்சியில் அனைவரையும் அரவணைத்து, முன்னேறி வருகிறார்.

தமிழக அரசியலில், தலைவர்களுக்கான வெற்றிடம் இருக்கிறது என சொல்வது தவறு. வெற்றிடம் குறித்து, நடிகர் ரஜினி, எதற்காக சொன்னார் என, எனக்கு தெரியவில்லை. நான் கேள்விப்பட்ட வரையில், தற்போது இருக்கும் முதல்வர், மக்களுக்கு நல்லது செய்கிறார். இவ்வாறு, ரோஜா கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X