சென்னை சென்னை, ஐ.ஐ.டி.,-யில், 2006 முதல் நிகழ்ந்த, மாணவர்கள் தற்கொலைகள் குறித்த வழக்குகளின் விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த, லோக் தந்திரிக் ஜனதா தள கட்சியின் இளைஞரணி தேசிய தலைவர் சலீம் மடவூர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:சென்னை, ஐ.ஐ.டி.,-யில் படித்த, கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், இம்மாதம், 9ம் தேதி, விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
பாத்திமா மன அழுத்தத்தில் இருந்ததாக, சக மாணவியர் கூறியதாக, விடுதி காப்பாளர் அளித்த புகாரில், கோட்டூர்புரம் போலீசார், சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல, 2006 முதல், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உட்பட, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 14 மாணவியர் தற்கொலை செய்துள்ளனர்.ஜாதி, மத ரீதியாகவும், ஆங்கில புலமை பெற்றவர்களாலும் நடந்த, பல கொடுமைகளே மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் என, கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள, ஐ.ஐ.டி.,க்களில், 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பார்லிமென்டில் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தால், இந்த வழக்கின் உண்மை தன்மை வெளியே வராது.எனவே, 2006 முதல் பதிவான தற்கொலை வழக்குகளை, சி.பி.ஐ.,- விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE