ஆடுகள் மீதான அன்பால், சென்னை, திருவான்மியூர், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, 48 ஆடுகளை வளர்க்கும் கவுசல்யா: ஆடுகளை நான், 'ஆடுகள்' என சொல்வதில்லை; 'பிள்ளைகள்' என்று தான் அன்பாகச் சொல்வேன். நான் குழந்தையாக இருந்த போது, வீட்டில், நிறைய பிள்ளைகளை வளர்த்தாங்க. அதனால், சின்ன வயதிலிருந்தே, அவற்றின் மீது பாசம் அதிகம். எங்கள் அம்மா இறந்த பிறகு, அவர் வளர்த்த பிள்ளைகளை, நான் வளர்க்கத் துவங்கினேன். சென்னையில், அதுவும் திருவான்மியூரில், பரபரப்பான தெருவில், பிள்ளைகளை வளர்ப்பது சாதாரண விஷயமில்லை.
பக்கத்து வீடுகளில் இருப்போர்; தெருவில் வசிப்போர் தொந்தரவு அதிகம்.காய்கறி சந்தையில் வீணாகப் போகும் காய்கறிகளை வாங்கி வந்து, இவற்றிற்கு தீவனமாக கொடுப்பேன்.அதை அறிந்து, அந்தக் கடைக்காரரை மிரட்டி, காய்கறிகளை கொடுக்க விடாமல் செய்து விட்டனர். அதற்காக நான் கவலைப்படவில்லை.பிள்ளைகள் விஷயத்தில், நான் கவுரவம் பார்ப்பதில்லை. தெருத் தெருவாகச் சென்று, குப்பைத் தொட்டிகளில் போடப்படும் வீணான காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை பொறுக்கி வந்து, தீவனமாக கொடுக்கிறேன். பிள்ளைகள் தான் என்றில்லை; எந்த விலங்கு அவதிப்பட்டாலும், நானும், என்னுடன் வசிக்கும் அக்கா அனுசுயாவும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.இப்படித் தான், எட்டு ஆண்டுகளுக்கு முன், கர்ப்பமாக இருந்த பசு மாட்டிற்கு, கோமாரி நோய் வந்தது என அறிந்து, அதை, சுடுகாட்டில் கொண்டு விட்டு விட்டனர், உரிமையாளர்கள்.கன்று ஈனுவதற்கு, அந்த பசு அனுபவித்த வேதனையைப் பார்த்து, அதற்கு உதவினோம். பால் கொடுக்க முடியாமல், அந்த பசு வேதனையில் இறந்து விட்டது. அந்த கன்றை எடுத்து வந்து, 'நந்தா' என பெயரிட்டு வளர்க்கத் துவங்கினோம். தெருவில் வளர்ப்பதை பிடிக்காதவர்கள் பிரச்னை செய்தனர்.என்ன செய்யலாம் என யோசித்தோம். நாங்கள் குடியிருக்கும், தீப்பெட்டி போன்ற சிறிய அறையை, நந்தாவுக்கு கொடுத்து விட்டு, நானும், அக்காவும் தெருவில் விரித்து படுத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு பிரச்னை இல்லை.இந்த பிள்ளைகளுடன், மூன்று நாய்களையும் வளர்க்கிறோம்.
அவை தான், பிள்ளைகளை தெரு தாண்டி போக விடாமல் தடுத்து, வீட்டுக்கு கொண்டு வந்து விடுகின்றன. எப்படி கண்ணும், கருத்துமாக இருந்தாலும், பிள்ளைகளை திருடிச் சென்று விடுகின்றனர். இதுவரை, ஏழு பிள்ளைகளை இழந்துள்ளோம். இவற்றின் மீதான பாசத்தால், திருமணம் பற்றி, இந்த, 48 வயது வரை நானோ, என் அக்காவோ யோசிக்காமலே இருந்து விட்டோம்!