பொள்ளாச்சி:மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும், டிச., 2ம் தேதி முதல் நடக்கிறது.உடுமலை, பல்லடம் மற்றும் திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், கேங்மேன் பணியிடத்துக்கு (பயிற்சி), 2,016 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு உடுமலையில் நடக்க உள்ளது.உடுமலையில் பழநி ரோட்டில் உள்ள மின்நிலைய வளாகத்தில் வரும், 2ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில், விண்ணப்பதாரர்கள் பங்கேற்று, சான்றிதழ்களை காட்டி, உடற்தகுதி தேர்வில் பங்கேற்கலாம்.இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள், 'இ மெயில்' மூலம் பெறப்பட்ட அனுமதிச்சீட்டு மற்றும் சரிபார்ப்பு பட்டியலில் உள்ள ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள், புகைப்பட அடையாள அட்டை, சான்றிதழ்கள், கடைசியாக படித்த கல்வி நிலையத்தில் இருந்து பெற்ற மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்று, மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்று, பண்பு மற்றும் நன்னடத்தை சான்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் பதிவு அட்டை கொண்டு வர வேண்டும். அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய ஒப்பமிட்ட நகல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.இதனை, உடுமலை வட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் முகமது முபாரக் அறிவித்துள்ளார்.