நம்புங்க... இது ரோடு தான்! உள்ளாட்சி எல்லையில் அவலம்| Dinamalar

நம்புங்க... இது ரோடு தான்! உள்ளாட்சி எல்லையில் அவலம்

Added : நவ 29, 2019

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஒன்றிய - பேரூராட்சி எல்லையில் அரசுத்துறைகளின் அலட்சியத்தால், தெப்பக்குளமாக மாறியுள்ள ரோடு வாகனங்களை வீழ்த்தி வருகிறது.பொள்ளாச்சி வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து பாலமநல்லுார் செல்லும் ரோடு, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி - தெற்கு ஒன்றியத்தின் எல்லையாக உள்ளது. ரோட்டின் வடக்கு பேரூராட்சிக்கும், தெற்குப்பகுதி தெற்கு ஒன்றியத்துக்கும் எல்லையாக உள்ளது.இதனால், ரோட்டை பராமரிப்பதில் குழப்பம் நிலவுகிறது. மேலும் இந்த ரோட்டின் கீழ் பதித்து எடுத்துச் செல்லப்படும் பிரதான குடிநீர் வினியோக குழாய், பல இடங்களில் உடைந்து, தண்ணீர் வெளியேறி வருகிறது.ஒரு ஆண்டாக நீடிக்கும் தண்ணீர் கசிவை சீரமைக்காமல் விட்டதால், ரோடு பல இடங்களில் அரிக்கப்பட்டு சிதைந்து பள்ளங்களாக மாறியுள்ளது.குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கி, பள்ளங்கள் தெப்பக்குளமாக காட்சியளிக்கிறது. பல்வேறு கிராமங்களுக்கும், 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்லும் வழித்தடம் என்பதால், வாகன போக்குவரத்து அதிகம்.படு மோசமான ரோட்டில் பயணிக்கும் வாகனங்கள், விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது. பொதுமக்கள் இந்த ரோட்டில் தினமும் அபாய சர்க்கஸ் பயணம் மேற்கொள்கின்றனர்.ஆனாலும், குழாயை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியமும், ரோட்டை சீரமைக்க சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, தெற்கு ஒன்றிய நிர்வாகங்களும் அக்கறை காட்டாமல் உள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X