பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க, 42 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தாசில்தார் அலுவலக வளாகத்தில், இரண்டு மாஜிஸ்திரேட் கோர்ட்கள், முன்சீப் கோர்ட் மற்றும் சார்பு நீதிமன்றம் என, நான்கு கோர்ட்கள், வக்கீல்கள் சங்க கட்டடம் அமைந்துள்ளது.ஒரே வளாகத்தில் இருந்தாலும், தனித்தனி இடங்களில் செயல்படும் கோர்ட்களை, ஒரே இடத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த கோர்ட் அமைக்க உத்தரவிட்ட தமிழக அரசு, நிதி ஒதுக்கீடும் செய்தது. ஆனாலும், இடம் தேர்வு செய்யப்படுவது தாமதம் ஏற்பட்டது. இறுதியில், கோவை ரோடு, சி.டி.சி.,மேடு பகுதியில், 2.30 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.இதிலும், குடியிருப்புகளுக்கு செல்ல இடம் ஒதுக்கப்பட்டு, இறுதியில், ஒருங்கிணைந்தகோர்ட் வளாகத்துக்கு, 2.10 ஏக்கர் இடம் இறுதி செய்யப்பட்டது. இது, சென்னை ஐகோர்ட்டின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தற்போதைய நிலையில், 10 கோர்ட் ஹால்கள், நீதிபதிகள் அறை, வக்கீல்கள் சங்க கூடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு அமைக்க, 42 கோடி என முடிவு செய்யப்பட்டு, அனுமதிக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கீடு மற்றும் கோர்ட் கட்டுமானப்பணிக்கு அனுமதி கிடைத்ததும், விரைவில் டெண்டர் விடப்பட்டு, கட்டுமானப்பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE