நாங்களும் வரி செலுத்துகிறோம்; குப்பை எரிப்பதால் குமுறல்| Dinamalar

'நாங்களும் வரி செலுத்துகிறோம்'; குப்பை எரிப்பதால் குமுறல்

Added : நவ 29, 2019

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர எல்லையில் உள்ள தில்லைநகரில், குப்பைக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், ரோட்டோரம் குவித்து தீ வைப்பதால், சுகாதாரம் பாதிக்கிறது.பொள்ளாச்சி நகராட்சி - வடக்கு ஒன்றிய எல்லையாக அமைந்துள்ளது கோவை ரோடு தில்லை நகர் குடியிருப்பு பகுதி. ஆச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இங்கு, இரண்டு நீளமான வீதிகள் மற்றும் குறுக்கு ரோடுகளில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு மக்களால் கொட்டப்படும் குப்பைக்கழிவுகள், பிற ஊராட்சிகளை போல் முறையாக சேகரித்து குப்பைக்கிடங்குக்கு கொண்டு சென்று தரம் பிரிப்பதில்லை.மாறாக, கோவை ரோட்டின் இரு பக்கத்திலும் குவிக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதை ஊராட்சி துப்புரவு தொழிலாளர்களே செய்கின்றனர். பல ஆண்டுகளாக இப்பிரச்னை தொடர்கிறது. கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை, தில்லை நகர் மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளி மற்றும் பிற குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து, மக்களுக்கு சுவாச பிரச்னையை ஏற்படுத்துகிறது. கோவை ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுனர்களும், குப்பை புகையால் பாதிக்கின்றனர். மக்கள் கூறுகையில், 'தில்லை நகரில் வசிக்கும் நாங்களும் ஊராட்சிக்கு அனைத்து வரிகளும் முறையாக செலுத்துகிறோம். 'ஆனால், எங்கள் பகுதி குப்பைகழிவுகளை அகற்றுவதில் மட்டும் அலட்சியம் காட்டுகிறது ஊராட்சி. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X