தெருநாய்கள் இறப்பு அதிகரிப்பு: விஷம் வைத்தது குறித்து விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தெருநாய்கள் இறப்பு அதிகரிப்பு: விஷம் வைத்தது குறித்து விசாரணை

Added : நவ 29, 2019

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் கூட்டமாக சுற்றும் நாய்கள், வாகனங்கள் வரும் போது, ரோட்டின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டுனர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாலிங்கபுரம் 'வாட்டர் டேங்க்' சந்து, சமத்துார் ராம ஐயங்கார் பள்ளி அருகே மற்றும் நந்தனார் காலனி உள்ளிட்ட இடங்களில், ஐந்து நாய்கள் மர்மமாக இறந்து கிடந்தன.பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி, நகராட்சி அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்தினர்.விஷம் கொடுக்கப்பட்டதா?மகாலிங்கபுரம் பகுதியில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரியும் சூழலில், யாராவது பிரட் அல்லது சிக்கன் துண்டுகளில் விஷம் கலந்திருக்கலாம். அதனை உட்கொண்ட நாய்கள் இறந்து இருக்கலாம் என, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நாய்கள் தொல்லை தாங்க முடியாத சிலர், நாய்களுக்கு விஷம் தடவிய உணவுகளை போட்டிருக்கலாம். அதனை உட்கொண்டவை இறந்துள்ளன. இது குறித்து விசாரிக்கப்படுகிறது,' என்றனர்.நகர்நல அலுவலர் மாணிக்கவேல் ராஜன் கூறுகையில், ''நாய்கள் இறந்தது குறித்து விசாரிக்கப்படுகிறது. ''நாய்களை கொலை செய்யும் நோக்கில் விஷம் கலந்த உணவுகளை வீசக்கூடாது. இதுபோன்று செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X