தமிழகத்தில், அடுத்தடுத்து பல மாவட்டங்கள் உதயமாகி வருகின்றன. நேற்று, 37வது மாவட்டமாக, செங்கல்பட்டு மாவட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார். உள்ளாட்சி தேர்தலுக்கு பின், மேலும், மூன்று புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், 32 வருவாய் மாவட்டங்கள் இருந்தன. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; வேலுார் மாவட்டத்தில் இருந்து, ராணிப்பேட்டை, திருப்பத்துார்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு என, ஐந்து மாவட்டங்கள், புதிதாக உருவாக்கப்பட்டன.
இம்மாவட்டங்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., நேரடியாக சென்று, அவற்றை துவக்கி வைத்தார்.நேற்று, 37வது மாவட்டமாக, செங்கல்பட்டு மாவட்டத்தை துவக்கி வைத்தார். புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, மேலும் பல மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.
சிறிதாகிவிட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, செய்யாறை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், புதிதாக உருவாக்கப்பட்ட பின், காஞ்சிபுரம் மாவட்டம் சிறிதாகி விட்டது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, செய்யாறு, வந்தவாசி சட்டசபை தொகுதிகளை, காஞ்சிபுரம் மாவட்டத்துடன் இணைப்பது குறித்து, அரசு தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கோரிக்கை மனு
ஆனால், அப்பகுதி மக்கள், தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, அமைச்சர்கள் மற்றும் முதல்வர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்துஉள்ளனர். முதல்வரின், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துாரை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சின்னதம்பி, ஜனவரி மாதம், சட்டசபையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், 'கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்றார்.
எனவே, அப்பகுதி மக்கள், புதிய மாவட்ட அறிவிப்பை, எதிர்பார்த்தபடி உள்ளனர். அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் உள்ள, கும்பகோணத்தை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு. இதுவும் பரிசீலனையில் உள்ளதாக, சட்டசபையில், ஏற்கனவே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தை பிரித்து, பொன்னேரி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற, கோரிக்கையும் உள்ளது. புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற குரல், பரவலாக எழுந்துள்ளதால், அதுபற்றி ஆராய, அரசு விரைவில் குழு அமைக்க உள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE