பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சியை நோக்கி ஆட்டோமொபைல் துறை :டி.வி.எஸ்., தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் நம்பிக்கை

Added : நவ 29, 2019
Advertisement
வளர்ச்சியை நோக்கி ஆட்டோமொபைல் துறை :டி.வி.எஸ்., தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் நம்பிக்கை

மதுரை :"ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அத்துறை மேலும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது," என டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார்.மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் டி.வி.எஸ்., சார்பில் 12 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட 'டி.எஸ். ஸ்ரீனிவாசன் வாகன ஆராய்ச்சி மையத்தை' (டி.எஸ்.எஸ்., சி.ஏ.ஆர்.,) வேணு ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமை வகித்தார்.வேணு ஸ்ரீனிவாசன் பேசியதாவது: இக்கல்லுாரியுடன் டி.வி.எஸ்., மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் துவங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம் ஆட்டோமொபைல் துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் சோதனை மையமாகவும் விளங்கும்.இத்துறையில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக இன்னும் வளர்ச்சியடையும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சைபர் செக்கியூரிட்டி, நானோ மெட்டீரியல், எலக்ட்ரிக்கல், பேட்டரி தயாரிப்பு உட்பட பல்வேறு துறையினரும் பங்கெடுக்கும் துறையாகவும் உள்ளது. இத்துறையை இம்மையம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் 'குறைந்த முதலீடு; அதிக மனித உழைப்பு' தொழில்நுட்பம் சிறந்தது. இதை இன்னும் எளிதாக்கினால் சீனாவை விட நாம் சாதிக்கலாம். அதுபோன்ற சாதனைக்கு இந்த ஆராய்ச்சி மையம் பயன்படும். வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, சமூக பங்களிப்பிற்காக இவ்விரு நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளன, என்றார். கருமுத்து கண்ணன் பேசுகையில், "இக்கல்லுாரி துவங்கி 35 ஆண்டு கால வரலாற்றில் இந்த ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டதும் நினைவு கூரத்தக்க நிகழ்வுகளில் ஒன்று. ஆட்டோமொபைல் ஆராய்ச்சியில் இம்மையம் திருப்புமுனையை ஏற்படுத்தும். ஆசிரியர், மாணவர்களிடையே ஆராய்ச்சிகளை மேலும் ஊக்குவிக்கும்," என்றார்.முதல்வர் அபய்குமார் வரவேற்றார். வாகன ஆராய்ச்சி மையம் குறித்து டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி இயக்குனர் கோவைசெழியன் விளக்கினார். மெக்கானிக்கல் பொறியியல் துறை தலைவர் பாலமுரளி நன்றி கூறினார்.

ஆற்றல்சால் ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை

"மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் துவங்கப்பட்டுள்ள 'டி.எஸ். ஸ்ரீனிவாசன் வாகன ஆராய்ச்சி மையத்தை' ஆற்றல்சால் மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஆட்டோமொபைல் துறை ஆராய்ச்சிகளை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள இம்மையத்தை ஆற்றல்சால் மையமாக மாற்றும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். தற்போது இத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒரு ஐ போனில் உள்ள எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப வசதிகள் கார்களிலும் கொண்டுவரப்பட்டுள்ளன.மதுரை மீதுள்ள பற்று மற்றும் உணர்வால் இம்மையம் துவங்கப்பட்டுள்ளது. டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி மற்றும் பொறியியல் கல்லுாரிக்கு மேம்படுத்தப்பட்ட சோதனை மையமாக இருக்கும் என்றார்.தியாகராஜர் பொறியியல் கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் கூறியதாவது: இருபது ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறை மீது தான் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது மாணவர்கள் அடிப்படை அறிவியல் மற்றும் அடிப்படை பொறியியில் துறையை நோக்கி கவனம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதன் அடிப்படையில் இந்த வாகன ஆராய்ச்சி மையம் அறிவு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு உதவும்.இக்கல்லுாரியில் இதுவரை ஏழு காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. மேலும் பல கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற இம்மையம் வித்திடும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X