உடுமலை:கிராம நீர்நிலை கரைகளில், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க தேவையான விதை, தென்னை நார், உரம், ஒன்றிய நிர்வாகத்தால் வினியோகிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், பசுமை பரப்பை அதிகரிக்க, நீர்நிலை கரைகள், புறம்போக்கு நிலங்களில், மரக்கன்றுகள் வளர்க்க மாவட்ட நிர்வாகம் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் திட்ட செயல்பாட்டுக்கான பொருட்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்து.தற்போது, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும், நீர்நிலை கரைகளில், மரக்கன்றுகள் வளர்க்க, தேவையான விதைகள், தென்னை நார் மற்றும் இயற்கை உரம் ஒன்றிய நிர்வாகத்தால் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
விதைகளை, தென்னை நாரால் மூடி, தண்ணீரில் நனைத்து, சிறிய குழி ஏற்படுத்தி, இயற்கை உரமிட்டு, நடவு செய்ய ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முறையில், ஒரு கிராமத்துக்கு, 300 விதைப்பந்துகள் தயாரித்து பருவமழைக்காலத்தில் உடனடியாக நடவு செய்யப்பட உள்ளது.இதில், தேக்கு, புளியன், வேம்பு, புங்கன் உட்பட விதைகள், மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. நடவுக்கான பணிகள் விரைவில் துவங்கும் என, ஒன்றிய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.