பாக்தாத், ஈராக்கில் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பிரதமர் அடில் அப்துல் மக்தி பதவி விலகியுள்ளார்.ஈராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தெற்கு ஈராக் பகுதியில் போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை வரவழைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலையாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.துப்பாக்கிச்சூட்டில் ஒரேநாளில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 233 பேர் படுகாயமடைந்தனர். தற்போது வரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 15,000க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஈராக்கின் மனித உரிமைகளுக்கான உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.இந்நிலையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போராட்டம் வலுத்து வருவதால் பிரதமர் அடில் அப்துல் மக்தி பதவி விலகியுள்ளார். இதை, பாக்தாத்தில் போராட்டக்காரர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.