சிவகங்கை : வைகை பாசன விவசாயிகள் நடவு செய்த நெல்லை காப்பாற்ற இன்னும் 90 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.
இல்லாவிடில் நீர் பற்றாக்குறை ஏற்படும். நடவு செய்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல்,விவசாயிகள் தவிப்பதாக,சிவகங்கை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தனர்.சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., லதா முன்னிலை வகித்தார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேலு,வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் பழனீஸ்வரி,கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார்,குன்றக்குடி வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன், கலெக்டர் பி.ஏ.,(வேளாண்மை) சர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விவாதம்:
சந்திரன் (இந்திய கம்யூ.,)சிவகங்கை: பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையை விவசாயிகளின் கடன் தொகையில் வரவு வைப்பதை தவிர்க்க வேண்டும்.
அக்கடனை நீண்ட கால கடனாக கணக்கிட்டு,இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்.பழனீஸ்வரி, நிர்வாக இயக்குனர், மத்திய கூட்டுறவு வங்கி: பயிர் காப்பீடு திட்ட விதியில், பயிர் இழப்பீடு தொகையை, அவர்களது கடன் பாக்கி தொகையை பிடித்தம் செய்து, எஞ்சிய தொகையை தான் வழங்குமாறு தெரிவிக்கிறது.
கணேசன், வேளாண் இணை இயக்குனர்: கடந்த ஆண்டு பயிர் காப்பீடு கோரி விண்ணப்பித்த மனுக்களில் உரிய தகவல் இன்றி 5,200 மனுக்கள் திரும்ப வந்தது. இந்த ஆண்டு 2,200 மனுக்கள் வந்துள்ளன. நில ஆவணங்களில் சிறு தவறு, பிரின்டிங்கில் தவறு இருந்தாலும், அம்மனுக்களை ஏற்க மறுக்கின்றனர்.
ஆபிரகாம், விவசாயி, காளையார்கோவில்: கடந்த 2018-- 19 ல் 152 கிராமங்களில் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு 25 சதவீத இழப்பீடு தான் வந்துள்ளது. இவர்களுக்கு 100 சதவீத இழப்பீடு கிடைக்க செய்ய வேண்டும் என காரைக்குடி வந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசையிடம் விவசாயிகள் சார்பில் மனு அளித்தோம். அவர் இதுகுறித்து மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதாக கூறினார்.
ஆதிமூலம், விவசாயி, திருப்புவனம்: வைகையில் இருந்து கடந்த 17 முதல் 20 ம் தேதி வரை வைகையில் பாசன வசதிக்காக 386 மி. கனஅடி தண்ணீர் திறந்தனர். இன்னும் 90 நாட்களுக்கு வைகையில் தண்ணீர் திறந்து, கண்மாய்களில் நீரை தேக்க வேண்டும். ஏற்கனவே வைகை ஆற்றில் இருந்து 85 விதமான கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதால், ஆற்றில் தண்ணீர் வற்றி விடுகிறது. வைகையில் தண்ணீர் திறக்காவிடில், நிலங்கள் பாலைவனமாகும். நெல்லை நடவு செய்த விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவிக்கிறோம்.
ராஜா, விவசாயி, திருப்புவனம்: வைகை ஆற்றில் 'செக் டேமில்' இருந்து கணக்கன்குடி, மடப்புரம் கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்த நீரை வைத்து தான், மடப்புரத்திற்கு திதி செய்வதற்காக வருவோருக்கு குளிக்க தண்ணீர் வழங்க முடியும்.
கலெக்டர்: இரு கண்மாய்க்கும் தட்டான்குளம் செக் டேமில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணன், விவசாயி, பில்லத்தி: காளையார்கோவில் ஒன்றியம், பில்லத்தி கண்மாய் துார்வாராமலும், மடை சேதமுற்று கிடப்பதால், 8 ஆண்டாக தண்ணீர் தேங்காமல் விவசாயம் பொய்த்துவிட்டது. கண்மாய், வரத்து கால்வாய் துார்வாரவேண்டும்.
திட்ட இயக்குனர் வடிவேலு: இன்னும் ஒரு வாரத்திற்குள் பில்லத்தி கண்மாய் துார்வாரி, வரத்து கால்வாய், மடையை சுத்தம் செய்து தருகிறோம்.ராமலிங்கம், விவசாயி, சிவகங்கை: பெரியாறு கால்வாயில் இருந்து ஷீல்டு,லெசிஸ் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடுவதாக, மதுரையில் முற்றுகை நடத்திய போது பொதுப்பணி அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், இது வரை கால்வாய்க்கு தண்ணீர் திறக்கவில்லை.
மோடி பிரபாகர், விவசாயி, திருப்புவனம்: மடப்புரத்தில் அதிகரித்து வரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நிலம் வைத்துள்ள விவசாயிகளை மட்டுமே பேச அனுமதிக்க வேண்டும். கூட்டத்திற்கு வருவோரிடம் நில ஆவணங்களை பெற்று அனுமதியுங்கள். அப்போது தான் அனைத்து விவசாயிகளும் குறைகளை தெரிவிக்க முடியும்.
தனபால், விவசாயி, திருக்கோஷ்டியூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தரும் மனுக்களுக்கு, தீர்வு காண்பதில்லை. இதனால், விவசாயிகள் குறைதீர் கூட்டம் கண்துடைப்பாக நடக்கிறது. மனுவை பெற்ற 30 நாளுக்குள் அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.பழனீஸ்வரி, நிர்வாக இயக்குனர், மத்திய கூட்டுறவு வங்கி: மாவட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 10.03 கோடி, கடன் பெறாத விவசாயிகளுக்கு 53.58 கோடி ரூபாய் இழப்பீடு தொகை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கியுள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.