பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க(சி.ஐ.டி.யு.,) பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கூட்டுறவு ரேஷன் கடைகளில் ஊழியர்கள் தொடர்ந்து குறைந்த ஊதியத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணியில் உள்ளனர். இவர்களுக்கு அதிக பட்சம் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆகவே இருவித சம்பளம் வழங்குவது முரண்பாடானதாகும்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், என தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை.அரசு திட்டங்களை ரேஷன் கடைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதில் ரேஷன் ஊழியர்களுக்கு எடை குறைவு, அதிகாரிகள் பிரச்னை, எடையாளர் இல்லாமல் பணியாற்றுவது மற்றும் தற்போது பொங்கல் பரிசு என அதிக வேலைப்பளு உண்டாகிறது.எனவே தொழிலாளர்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு ஊதியக்குழு பரிந்துரை செய்ததை அமல்படுத்த வேண்டும். அரசு தாமதம் செய்தால் பொங்கல் பரிசு வழங்க இயலாத நிலை ஏற்படும். மேலும் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவோம், என்றார்.