ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வைகை அணை நீரை திறக்க வலியுறுத்தியும், கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடு செய்ய மறுப்பதை கண்டித்தும் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
குறை தீர் கூட்டத்திற்கு வேளாண்மை துணை இயக்குனர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தார். கூட்டம் துவங்கியதும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணை நீரை வழங்கவில்லை என விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன் கூறியதாவது:நவ.,9 முதல் 16 வரை வைகை அணையில் இருந்து ராமநாதபுரத்திற்கு 1,441 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது 4 அடி தேக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் வரை 187 கி.மீ., உள்ளது. இங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவது சவாலான காரியம். கடந்த நவ.,12ல் பார்த்திபனுார் மதகணையை வந்தடைந்த வைகை நீர் அனைத்து பாகங்களுக்கும் வலது இடது கால்வாய்கள் வழியாக திறந்து விடப்பட்டது.தண்ணீர் திறந்து விடுவதில் மறைமுகமாக பல அச்சுறுத்தல்கள் எனக்கு வந்தது. வைகை அணை பகுதியில் மழை பெய்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து இன்னும் 10 நாட்களுக்குள் ராமாதபுரம் கொண்டு வரப்படும். இந்த தண்ணீர் வலசை பகுதிக்கும், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கும் பாதியாக வழங்கப்படும்.
ராமநாதபுரம் விவசாயிகள் ஆர்.எஸ்.மங்கலத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவிக்க கூடாது.நீரின் வழித்தடங்கள் ஈரமாக இருப்பதால் தண்ணீர் திறந்தால் வேகமாக வந்துவிடும். பெரும்பாலான இடங்களுக்கு தண்ணீர் வழங்கியாகிவிட்டது. இனி வரும் தண்ணீர் இதுவரை வழங்காத இடங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.