கோவை:பஞ்சாப்பில் நடக்க உள்ள தேசிய அளவிலான தடகள போட்டிக்கு, தமிழக அணியில், கோவையை சேர்ந்த ஐந்து வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில், 62வது குடியரசு தின, மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி, திருச்சி மாவட்டம் கொங்குநாடு இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது.14, 17, 19 வயதுக்கு உட்பட்ட, 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1,500மீ., 3,000மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடந்தது; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், ஆவாரம்பாளையம், ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி சஞ்சய், 1,500மீ., 3,000மீ., போட்டியில் முதலிடம்; கோபால் நாயுடு பள்ளி தனுஷ் ஆதித்யன் நீளம் தாண்டுதலில் முதலிடம்; கே.ஜி., பள்ளி சவ்மியா 1,500மீ., 3,000மீ., போட்டியில் முதலிடம்; ஸ்டேன்ஸ் பள்ளி ஒலிமா ஸ்டெபி, 400மீ., தடை தாண்டுதம் ஓடுதலில் முதலிடம் பிடித்தனர்.கோவை மாவட்ட அணி, 7 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியது. முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர், பஞ்சாப்பில் நடக்க உள்ள தேசிய தடகள போட்டிக்கு, தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.