விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் இணைப்பு சாலை, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
திருச்சி - சென்னை மார்க்கத்தில் உள்ள விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக, 50க்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி செல்கின்றன. கல்வி, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தினசரி 5,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். உளுந்துார்பேட்டை மார்க்கத்தில் இருந்து, ரயில்வே ஜங்ஷன் இணைப்பு சாலை வழியாக, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர்.
இந்நிலையில், பிரதான பகுதியான ரயில்வே ஜங்ஷன் இணைப்பு சாலை, குறுகிய சாலையாக உள்ளதால் விபத்துகள் அதிகரித்தன. சாலையை அகலப்படுத்தி, சென்டர் மீடியன் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில், இருபுறமும் சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, சாலையின் இருபுறம் பள்ளம் தோண்டி, விஸ்தரிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. இப்பணியை, உதவி கோட்ட பொறியாளர் நல்லதம்பி, உதவி பொறியாளர் மருதாச்சலம் ஆகியோர் பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினர்.