கோவை :''ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் பனைமர விதைகளின் உட்பகுதியிலிருந்து உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து பவுடருக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது'' என பாரதியார் பல்கலை தாவரவியல் துறை பேராசிரியர் பரிமேழழகன் தெரிவித்தார்.பாரதியார் பல்கலை தாவரவியல் துறை மூலம் 2008ல் பனைமர விதைகள் மூலம் ஊட்டச்சத்து பவுடர் தயாரிக்கும் ஆராய்ச்சி துவக்கப்பட்டது. மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் இதற்கு நிதியுதவி வழங்கியது. பேராசிரியர் பரிமேழழகன் தலைமையில் ஆராய்ச்சி மாணவர்கள் அருணாசலம் மற்றும் சரவணன் இணைந்து 2010ல் ஆராய்ச்சியை நிறைவு செய்து இந்திய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் கடந்த 27ம் தேதி உரிய அங்கீகாரத்துடன் காப்புரிமையை இந்திய காப்புரிமை அலுவலகம் வழங்கியுள்ளது.ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் பரிமேழழகன் கூறியதாவது:பனைமரத்தின் வேர் முதல் நுனி வரை மனிதர்களுக்கு பயன்தரக்கூடியது. ஆனால் இதன் சீம்பு எனப்படும் விதையின் கருவின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு இன்றி வீணடிக்கப்படுகிறது. இது ஊட்டச்சத்து பொருட்களாக இன்றளவும் பழங்குடியின மக்களிடம் பயன்பாட்டில் உள்ளது. மிகுந்த ஈரப்பதம் கொண்டதாக இருப்பதால் விரைவில் அழுகிவிடும்; இதனால் ஊட்டச்சத்து பவுடராக மாற்ற திட்டமிட்டு ஆய்வு துவக்கினோம்.பல்வேறு சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட இதை பதப்படுத்தி பவுடர் வடிவத்துக்கு மாற்றினோம். ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளது. பனைமர விவசாயிகளுக்கு இதன் மூலம் பொருளாதார நிலை உயரவும் வாய்ப்புள்ளது. தற்போது இதற்கான காப்புரிமையை பெற்றுள்ளோம். வணிகப்படுத்த பல்கலை நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது, என்றார்.