சபரிமலை:சபரிமலையில், நடை திறந்து, 17 நாட்களில் வருமானம், 40 கோடி ரூபாயாக
அதிகரித்தது. இது, கடந்த ஆண்டை விட, 100 சதவீதம் அதிகமாகும்.
சபரிமலையில், மண்டல காலம், நவ., 17ல் துவங்கியது. பக்தர்கள் வருகை அதிகமாக
உள்ளதால், வருமானமும் அதிகரித்துள்ளது. 17 நாட்களில், வருமானம், 40 கோடி ரூபாயாக
அதிகரித்தது. கடந்த ஆண்டு, இதே காலம், 21 கோடி ரூபாய்தான் கிடைத்தது. அரவணை
விற்பனையில், 15.45 கோடி, காணிக்கையாக, 13.26 கோடி, அப்பம் விற்பனையில், 2.05 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
தேவசம் போர்டு தலைவர் வாசு கூறுகையில், ''சபரிமலை சீசன் சிறப்பாக உள்ளது. அய்யப்பன் அருளால், நல்லதே நடக்கும். 20 லட்சம் டின் அரவணை இருப்பு உள்ளதால், தட்டுப்பாடு வராது,'' என்றார்.
முன்பதிவு மையம்
சபரிமலை தரிசனத்திற்கு, கேரள போலீஸ், 'விர்ச்சுவல் க்யூ' என்ற முன்பதிவு இணையதளத்தை நடத்தி வருகிறது. இதில், பதிவு செய்வோர், சபரி பீடத்தில் இருந்து, தனி பாதை மூலம், சன்னிதானம் செல்லலாம்.ஆனால், 'ஆன்லைன்' முன்பதிவு, மிகவும் விரைவாக முடிந்து
விடுகிறது. எனவே, நேரில் வரும் பக்தர்கள் வசதிக்காக, இடுக்கி மாவட்டம், குமுளியில், 65ம் மைல் என்ற இடத்தில், முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு, 'என்பீல்டு புல்லட்' பைக்கில் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு, கேரள மாநிலம், செங்கன்னுாரில் வசதி செய்யப்பட்டுள்ளது. கொச்சியை தலைமையிடமாக கொண்ட, 'கபே ரைட்ஸ்' என்ற நிறுவனம், வாகனங்களை வாடகைக்கு விடுகிறது.இதன்படி, செங்கன்னுார் ரயில் நிலையத்தில் இருந்து, பக்தர்களுக்கு, 'புல்லட்' வசதி செய்து கொடுக்கப்படுகிறது.
பக்தர்கள் அடையாள அட்டையின் அசல், நகல் வைத்திருக்க வேண்டும். 24 மணி நேர வாடகை, 1,200 ரூபாய்.முதல், 200 கி.மீ., வரை இந்த கட்டணம். அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.,க்கும், ஆறு ரூபாய் செலுத்த வேண்டும். இந்த வசதி, நேற்று துவங்கப்பட்டது.
மருத்துவமனை திறப்பு
சபரிமலை சன்னிதானத்தில், நாயர் சர்வீஸ் சொசைட்டி எனும், என்.எஸ்.எஸ்., இலவச
மருத்துவமனை திறக்கப்பட்டது. மாளிகைப்புறம் கோவில் எதிரில், பாண்டித்தாவளம் செல்லும் பகுதியில் அமைந்துள்ள, இதை, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பந்தளம், என்.எஸ்.எஸ்., மெடிக்கல் மிஷன் மருத்தவமனை டாக்டர் ஜோதிபாபு, இதன் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில், அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆண்டு, இந்த மருத்துவமனை திறக்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE