கடலுார் : கடலுார் மாவட்ட அங்கன்வாடிகளில் அதிகளவு பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் மொத்தம் 2,023 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 83,608 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில், 1,835 பணியாளர்களும், 1,633 உதவியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.தற்போது அங்கன்வாடிகள் முறையாக செயல்பட, பணியாளர்களின் வருகை பதிவு, குழந்தைகளின் வருகை உள்ளிட்ட அனைத்தும் மொபைல் போன் ஆப் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கு தினமும் அனுப்ப வேண்டும். இது மாதந்தோறும் கண்காணிப்படுகிறது.
இங்கு கர்ப்பிணி பெண்கள், குழந்தை பிறந்த பின்னர் தடுப்பூசி, இணை உணவு என பிறந்த குழந்தைகள் தொடர்ந்து ஆயிரம் நாட்கள் அங்கன்வாடி பணியாளர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இங்கு குழந்தைகளின் எடை, உயரம், உள்ளிட்டவற்றை, 15 நாட்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு, மொபைல் மூலம் தலைமையிடத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்காக ஒவ்வொரு மையத்திற்கும் 4 கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. வாரத்தில் முதல் திங்கள் மற்றும் 3வது திங்கள் கிழமைகளில் கர்ப்பிணி பெண்ணிற்கு சமூக வளைகாப்பு நடத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு தாய் பால் கொடுப்பதற்கு அடுத்த படியாக முதல்முதலில் இணை உணவு அங்கன்வாடி ஊழியர்கள் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு முதல் முறை உணவு வழங்குவதை, பலர் கோவிலுக்கு சென்று, சிறு நிகழ்ச்சியாக கொண்டாடுவர். அங்கன்வாடியில் இது போன்று நிகழ்ச்சி நடந்த மாதத்திற்கு 500 ரூபாய் அரசு வழங்குகிறது.அங்கன்வாடியில் இது போன்ற பல்வேறு தொடர்பணிகள் இருப்பதால், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிக அளவில் உள்ளது. 188 இடங்கள் பணியாளர் பிரிவிலும், 286 இடங்கள் உதவியாளர் பிரிவிலும் காலியாக உள்ளன.
எனவே, அங்கன்வாடியில் உள்ள காலிப்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் , வழக்கு முடிந்த பின்னர் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படுவர்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE