கோவை,:விவசாய விளைநிலங்களில் நடப்பட்டுள்ள நிலஅளவை கற்களை பிடுங்கி எறிபவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்தார்.அதில், விவசாயிகள் கூறியதாவது:கோவையில் தொடர்ந்து பெய்த கன மழைக்கு, ஏராளமான வாழை மரங்கள் அழுகி நாசமாகியுள்ளன. காப்பீடு திட்டத்தில் இழப்பீடு கேட்டால், எந்த நிறுவனமும் தொகை வழங்க முன் வருவதில்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கோ-4, 5, 6 நாட்டு ரக பப்பாளி விதை கிடைப்பதில்லை. மானிய விலையில் பப்பாளி உள்ளிட்ட பயிர்களுக்கான விதை வழங்க வேண்டும். விவசாய நிலங்களில் உள்ள நிலஅளவை கற்களை பலர் பிடுங்கி எறிந்து விடுகின்றனர். இதனால், நில அளவீட்டில் மாறுபாடு ஏற்பட்டு, தகராறு நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்.வெள்ளை ஈ தாக்கியதில், தென்னை மரங்கள் காய்ந்ததற்கும், மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாலும், இழப்பீடு வழங்க வேண்டும். கட்டட கழிவு மறுசுழற்சி மையம் கட்டி, குளங்களையும், நீர்வழிப்பாதையையும் பாதுகாக்க வேண்டும். கோவையில் குறைந்து வரும் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.கலெக்டர் பதிலளிக்கையில், ''எல்லை அளவு கற்களை பிடுங்கி எறிபவர்களை போலீசார் கண்டறிந்து, வழக்கு பதிய வேண்டும். பப்பாளி விதை கிடைப்பதற்கும், தக்காளிக்கு இழப்பீடு, வாழைக்கு காப்பீடு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்,'' என, உறுதியளித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் முன்னிலை வகித்தார். அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.