தமிழ்நாடு

 உள்ளாட்சி தேர்தல், 'சீன்கள்' கிராமங்களில் பத்திக்கிச்சு! ...'காக்கா புடி'யில் போட்டியாளர்கள் மும்முரம்

Added : நவ 30, 2019
Advertisement
 உள்ளாட்சி தேர்தல், 'சீன்கள்' கிராமங்களில்  பத்திக்கிச்சு!  ...'காக்கா புடி'யில் போட்டியாளர்கள் மும்முரம்

உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால், கிராம ஊராட்சிகளில், தேர்தலுக்கான சீன்களை, போட்டியாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.

கிராமத்தின் தேவைகளை நிறைவேற்றுவதாக கூறி, வாக்காளர்களிடம் ஓட்டு கேட்க ஆரம்பித்துள்ளனர்.தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட, 2016க்கான உள்ளாட்சித் தேர்தல், பழங்குடியினர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கால், சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல், ஊராட்சி பதவிகளை, அரசின் தனி அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த அரசின் அறிவிப்பு, அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.மேலும், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், நகர் மன்றம், பேரூராட்சி பதவிகளுக்கு போட்டியிட உள்ளோரிடம், விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.இதனால், உள்ளாட்சி தேர்தலில், தலைவர் மற்றும் துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட காத்திருக்கும் நபர்கள், தங்கள் ஓட்டு சேகரிப்பு பணியை நேரடியாகவும், மறைமுகமாகவும், கிராமங்களில் துவக்கி உள்ளனர்.

தேர்தல் பரபரப்பு துவங்கும் முன், தன் போக்கில் இருந்த போட்டியாளர்கள் பலரும், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில், வாக்காளர்களிடம் திடீர் அன்பு காட்ட துவங்கியுள்ளனர்.அதாவது, அழைப்பு விடுக்கவில்லை என்றாலும், விருந்தாளியாக வீட்டு விசேஷங்களில் பங்கேற்பது, தாமாக சென்று, வீட்டில் உள்ளோரிடம் நலம் விசாரிப்பது போன்ற வேலைகளில், போட்டியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.தவிர, பிள்ளைகளின் படிப்பு, வேலை உள்ளிட்டவை குறித்து, வீட்டில் உள்ளோரிடம் கேட்டுவிட்டு, தான் தேர்தலில் நிற்பதாக கூறி, ஓட்டு வேட்டைக்கு முன்கூட்டியே அச்சாரமிட்டு வருகின்றனர்.

'இந்த தேர்தல் சீன்கள், கிராமங்களில் நடப்பதை பார்க்கும் இளைய வாக்காளர்களுக்கு புதிதாக இருக்காலம். கடந்த ஆண்டுகளில், பல உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளித்த நாங்கள், இந்த காக்கா புடி வேலையை எல்லாம், முன்பே கண்டது தான்' என, கிராமத்தினர் வேடிக்கையாய் சிரிக்கின்றனர்.நெல்லி கிராம பெண்கள் ஆவேசம்அடிப்படை வசதி இல்லாததால், தேர்தலை புறக்கணிக்க உள்ளது குறித்து, உத்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி ஊராட்சி, நெல்லி கிராமத்தினர் கூறியதாவது:எங்கள் ஊருக்கு, பல ஆண்டுகளாக பெயர் பலகையே இல்லாமல் இருந்தது. சமீபத்தில் தான் பெயர் பலகை வைக்கப்பட்டது.பஸ் நிறுத்தம் இல்லை. ஊரின் எல்லையில் இருந்து வீடுகள் வரை, சாலையோர மின்கம்பங்கள் இருந்தாலும், மின் விளக்குகள் ஒன்றுகூட எரிவதில்லை.தவிர, 150க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருந்தும், ரேஷன் கடை இல்லை. இதனால், 2 கி.மீ., உள்ள கம்மாளம்பூண்டிக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது.

மேலும், எந்த பொருள், எப்போது வழங்குகின்றனர் என்ற விபரம் தெரிவதில்லை.மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் வால்வு பழுதடைந்து உள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் நேரடியாக வினியோகிப்பதால், மின்தடை நேரங்களில் குடிநீர் வினியோகிப்பதில்லை.முக்கியமாக, வடிகால்வாய் வசதி இல்லாததால், மழை பெய்யும்போது, தெருக்களில் மழை நீர் தேங்குகிறது.இயற்கை உபாதையை கழிக்க மகளிர் சுகாதார வளாகம் இல்லாததால், முட்புதர்களில் தஞ்சமடைய வேண்டிய நிலை உள்ளது.ஓட்டுக்காக வரும் அரசியல்வாதிகள், மேற்கூறிய அடிப்படை வசதிகளை எல்லாம் கண்டுகொள்வரா என, தெரியவில்லை.

ஆனால், அதிகாரிகள்கூட இதை கண்டுகொள்வதில்லை.எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதியை மேம்படுத்தாவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கலாம் என, முடிவு செய்துஉள்ளோம். அதேபோல், ஓட்டு கேட்டு, எந்தவோர் அரசியல் கட்சியினரும், எங்கள் கிராமத்திற்கு வரக்கூடாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X