ரேஷன் கடை விற்பனையாளர் மரணம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை விற்பனையாளர் மரணம்

Added : நவ 30, 2019

விருத்தாசலம் : ரேஷன் கடை விற்பனையாளர் சாவுக்கு காரணமாக இருந்த ரவுடிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், இறந்தவர் மனைவிக்கு நிவாரணம் பெற்றுத்தரவும், விருத்தாசலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீதாராமன், 56; ரேஷன் கடை விற்பனையாளர். இவரது மனைவி வளர்மதி, 54. அதே ஊரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. ரவுடி. இவரது மனைவி வேல்விழி. உறவினர்கள். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது.இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22ம் தேதியன்று, சீதாராமன் வீட்டிற்கு சென்ற ராமமூர்த்தி, வேல்விழி இருவரும் வளர்மதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை தட்டிக்கேட்ட சீதாராமனை, ராமமூர்த்தி தாக்கினார். அதில் மயக்கமடைந்த சீதாராமனை அங்கிருந்த வேனில், சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயன்றபோது, தம்பதி இருவரும் தடுத்து தகராறு செய்துள்ளனர்.பின்னர், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது, சீதாராமன் இறந்திருப்பது தெரிய வந்தது. கணவர் சாவுக்கு காரணமான ராமமூர்த்தி, வேல்விழி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வளர்மதி கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சீதாராமன் இறப்புக்கு காரணமாக இருந்த ராமமூர்த்திக்கு ஓராண்டு சிறை, 500 ரூபாய் அபராதம், வேல்விழிக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார். மேலும், இறந்தவரின் மனைவி வளர்மதிக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்கவும், அதற்குரிய நடவடிக்கையை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் மேற்கொள்ளவும் நீதிபதி இளவரசன் பரிந்துரை செய்தார். அரசு சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜரானார்.சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராமமூர்த்தி மீது ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் ஸ்டேஷனில், மேலும் ஏழு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X