புதுச்சேரி : மத்திய சிறையில் நடந்த அதிரடி சோதனையில், விசாரணை கைதிகள் யார்டில் இருந்து மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையில் உள்ள கைதிகள், மொபைல் போன் மூலம், வெளியில் உள்ள தனது ஆட்களை கொண்டு குற்றங்களை நிகழ்த்தி வருவதை தடுக்கும் பொருட்டு, சிறையில் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.அவ்வாறு நேற்று முன்தினம் மாலை 5.45 மணியளவில் சிறை கண்காணிப்பாளர் கோபிநாத், உதவி கண்காணிப்பாளர்கள் கணேசன், சிவநேசன் ஆகியோர் தலைமையில் வார்டர்கள் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள யார்டு-1ல் உள்ள அறை எண் 1ல் சாம்சங் மொபைல் போன் பேட்டரியுடன் இருந்ததை, சிறை வார்டர் காளிதாசன் கண்டெடுத்து உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.