திருவண்ணாமலை, : ''உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி தொடரும்,'' என, பா.ம.க., மாநில தலைவர் மணி கூறினார்.
திருவண்ணாமலையில், பா.ம.க., மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில துணை பொது செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். மாநில தலைவர் மணி, தெற்கு மாவட்ட தலைவர் ஜானகிராமன், மேற்கு மாவட்ட தலைவர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு, கட்சி வளர்ச்சி பணிகள், மகளிர் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
முன்னதாக, நிருபர்களிடம் மணி கூறியதாவது:
வரும் ஜன.,4ல், பூம்புகாரில் பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, வன்னிய மகளிர் பெருவிழா நடக்கிறது. இதில், ஐந்து லட்சம் மகளிர் கலந்து கொள்வர். ராமதாஸ், அன்புமணி பங்கேற்பர். உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., போட்டியிடும்.
குடிமராமத்து பணி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த, தி.மு.க., முன் வர வேண்டும். திருவண்ணாமலையில், கிரிவல பக்தர்களுக்கு பாதுகாப்பு, தரமான நடைபாதை அமைக்க வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்ட் பணி விரைவில் தொடங்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.