குன்னுார், நீலகிரியில், தரம் குறைந்த தேயிலை துாள் உற்பத்தி செய்த, 18 தொழிற்சாலைகளுக்கு, தென்னிந்திய தேயிலை வாரியம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை வாரியத்தின் மண்டல அலுவலர்கள், சில மாதங்களுக்கு முன் நடத்திய ஆய்வில், கலப்பட தேயிலை துாள் தயாரித்த, சோலுார் எம்.ஜி., தொழிற்சாலை, குன்னுார் ஸ்வாமி அண்ட் சுவாமி பிளான்டேஷனான, ஹைபீல்டு தேயிலை தொழிற்சாலை ஆகியவற்றின் உரிமத்தை, தேயிலை வாரியம் நிரந்தரமாக ரத்து செய்தது. மேலும், 'பேரமவுன்ட் டீ மார்க்கெட்டிங் கம்பெனி'யின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்திய ஆய்வில், மாவட்டத்தில், 'ஸ்னோடென், அபினயா, எஸ்.என்., பகவான், ஸ்மார்ட், சத்யம், எச்.ஆர்.டி., நறுமுகை, ஈவ்லின், ஸ்ரீசுதர்சன், ஷரவணா, டி.சி., டீ என்டர்பிரைசஸ் ஆகிய தனியார் தொழிற்சாலைகள், கரும்பாலம், பிக்கட்டி, பந்தலூர், பிரான்டியர், சாலிஸ்பரி கூட்டுறவு தொழிற்சாலைகள், சேரங்கோடு டான்டீ ஆகியவை, தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையிலும், வாரியம் நிர்ணயித்த உற்பத்தி அளவை விட, கூடுதலாக உற்பத்தி செய்வதும், கூடுதல் கரட்டை இலைகளுடன் ஆர்.சி., சேர்த்து தயாரிப்பதும் தெரியவந்தது; தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறுகையில், ''தரமற்ற தேயிலை உற்பத்தியின் காரணமாக, தென்னிந்திய தேயிலை துாளின் சராசரி விலை குறைந்து வருகிறது. ஆய்வுக்கு பின்பு, சட்ட விதிமீறலில் ஈடுபட்ட, 18 தொழிற்சாலைகளுக்கு, 'ஷோகாஸ் நோட்டீஸ்' கொடுத்து, ஒருவாரம் காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.